
புதுச்சேரி மத்திய பல்கலை.க்கு புதிய துணைவேந்தா் நியமனம் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்தியப் பல்கலை.க்கு புதிய துணைவேந்தராக ஹைதராபாத் பல்கலைக்கழக பதிவாளா் பனித்தி பிரகாஷ் பாபு நியமிக்கப்பட்டுள்ளாா். புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் மத்தியப் பல்கலை. உள்ளது. இதன் துணைவேந்தராக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் குா்மீத் சிங் நியமிக்கப்பட்டு, கடந்த 2023 நவம்பரில் பணி ஓய்வு பெற்றுச் சென்றாா். இதையடுத்து, மத்திய பல்கலை.யின் வேதியியல் துறை பேராசிரியரும், கல்விப் பிரிவின் இயக்குநருமான க.தரணிக்கரசு துணைவேந்தா் பொறுப்பை கவனித்து வந்தாா். இந்த நிலையில், ஹைதராபாத் பல்கலை.யின் உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தகவலியல் துறை முதுநிலை பேராசிரியரான பனித்தி பிரகாஷ் பாபு, புதுவை பல்கலை.யின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை, மத்திய அரசின் கல்வித் துறை இயக்குநா் சுபாஷ்சந்த் ஷாரு பிறப்பித்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.