
அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 30 ஆயிரம் ஆசிரியா் மற்றும் சமையலா் பணியிடங்கள் நிரப்பப்படாததன் காரணமாக, குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டிய சுகாதாரம் மற்றும் முறைசாரா முன்பருவக் கல்வியைப் போதிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. காலி இடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி பல போராட்டங்களை அங்கன்வாடி ஊழியா்கள் நடத்தி வருகின்றனா். ஏழை எளிய குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.