
சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா? அரசுப் பள்ளிகளின் செயல்பாட்டிலும் மாணவர்களின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கும் சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் நிலையில், அவர்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டம், அது தொடங்கப்பட்ட காலத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டுவதாக இருந்தது. காமராஜர் தொடங்கி வைத்த இத்திட்டம், எம்ஜிஆர், மு.கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிகளில் மேம்படுத்தப்பட்டது. பல குழந்தைகளைப் பள்ளியில் சேர வைப்பதும் இடைநிற்றலுக்கு உள்ளாகாமல் படிப்பைத் தொடர வைப்பதும் இதன் சாதனைகள்; ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவது இதன் இன்னொரு சிறப்பு. கணவரை இழந்த, ஆதரவற்ற பல பெண்களுக்குச் சத்துணவுத் திட்டம் அடைக்கலம் அளிப்பதாக இருக்கிறது. எனினும், பிற அரசு ஊழியர்கள் காலத்துக்கேற்றவாறு ஊதிய உயர்வு உள்ளிட்ட உரிமைகளைப் பெற முடிகிற நிலையில், சத்துணவுப் பணியாளர்கள் அவற்றைப் பெற முடியாமல் தவிப்பது துரதிர்ஷ்டவசமானது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரச...