
தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் 15 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற ராமதாஸ் கோரிக்கை தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குக் கூட திமுக அரசுக்கு மனம் இரங்கவில்லையா?என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'பழைய ஓய்வூதியத் திட்டம், சம வேலைக்கு சம ஊதியம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் நிலையில் அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு இன்று வரை முன்வர மறுக்கிறது. அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களை சாலையில் இறங்கி போராட அரசு தூண்டுவது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் தான் எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குபவர்கள். அவர்கள் எந்தக் கவலையுமின்றி இருந்தால் தான் மாணவர்களை அறிவார்ந்தவர்களாக உருவாக்குவதில் முழுமையான கவனத்தை செலுத்த முடியும். ஆனால், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் அடிப்படை வாழ்வாதாரம் சார்ந்த கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் அவர்களை போராட்ட நிலையிலேயே தம...