25,000 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்.. வாங்கிய சம்பளத்தையும் முழுசா திரும்ப தரணும்! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மேற்கு வங்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு 25 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதற்கிடையே அவர்களின் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனங்களையும் ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.
இதற்கிடையே கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை இப்போது சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. அதாவது ஆசிரியர் தேர்வில் பங்கேற்றவர்களில் பலர் எதுவுமே எழுதாத வெற்று ஓஎம்ஆர் தாள்களையே சமர்ப்பித்துள்ளனர். அதன் பிறகு அவர்களுக்குப் போலியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, சட்டவிரோதமாக அவர்கள் பணியமர்த்தப்பட்டனர் என்பதே வழக்காகும்.
கொல்கத்தா ஐகோர்ட்
இந்த வழக்கை முதலில் கொல்கத்தா ஐகோர்ட் விசாரித்தது. 25 ஆயிரம் ஆசிரியர்களின் பணி நியமனங்களையும் ரத்து செய்த கொல்கத்தா ஐகோர்ட், இதுவரை அவர்கள் பெற்ற சம்பளத்தையும் திரும்பத் தர வேண்டும் என்று கடந்தாண்டு உத்தரவிட்டது. இது அப்போது மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. கொல்கத்தா ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் செயல்முறையும் மோசடியால் நடந்துள்ளது என்றும் இதனால் அதன் நம்பகத்தன்மை மற்றும் சட்டபூர்வ தன்மை சந்தேகத்திற்கு உள்ளாகி இருக்கிறது என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் உத்தரவு
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை என்று கூறியது. மோசடி மூலமாகவே பணி நியமனங்கள் நடந்துள்ளன என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா தலைமையிலான திரிணாமுல் அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக மேற்கு வங்க அரசே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது. மோசடி செய்த சிலருக்காக மற்ற அனைத்து நியமனங்களையும் ரத்து செய்வது சரியானது இல்லை என்றும் மோசடி செய்தவர்கள் மற்றும் நியாயமாக பணியில் சேர்ந்தவர்கள் எனப் பிரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது.
சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ஆனால், இதை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் புதிய ஆசிரியர் தேர்வு செயல்முறையை முடிக்குமாறு நீதிமன்றம் மாநில அரசைக் கேட்டுக் கொண்டது. 2016இல் தேர்ச்சி அடைந்தவர்கள் இந்தப் புதிய செயல்முறையிலும் தேர்ச்சி பெற்றால் அவர்கள் இத்தனை ஆண்டுகள் பெற்ற சம்பளத்தைத் திருப்பித் தர வேண்டியதில்லை.
அதேநேரம் தேர்வில் தோல்வி அடைவோர் இத்தனை காலம் பெற்ற அரசு சம்பளத்தைத் திரும்ப தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையில் அவர்கள் தங்கள் வேலையில் தொடரலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி
கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் 24,640 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பத் தேர்வு அறிவிக்கப்பட்டது. அதில் 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 24,640 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்த நிலையில், 25,753 பேருக்கு பணிநியமன கடிதம் வழங்கப்பட்டது. இதுவே மோசடி புகார் எழக் காரணமாகும். தொடர்ந்து நடந்த விசாரணையில் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் பலர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment