பட்ஜெட்டில் ஏமாற்றம்: பணியிட எண்ணிக்கையை அதிகரிக்க போராடும் 37,000 பட்டதாரி ஆசிரிய தேர்வர்கள்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2023 அக்டோபர் 25-ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிக்கையை வெளியிட்டது. இத்தேர்விற்கு 40000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.
அதன்படி தேர்வு 04/02/2024 அன்று நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் 17/05/2024 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்விற்காக அறிவிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் 3192 ஆகும். ஆனால் 2803 பேரை மட்டுமே தேர்வு செய்து பட்டியல் வெளியிட்டது ஆணையம். அவர்களுக்கும் இன்னும் பணி ஆணை வழங்கப்படவில்லை.
கடந்த 10 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத் தேர்வு நடைபெறவில்லை. கடைசியாக 2013-2014-ம் கல்வியாண்டில் அ.தி.மு.க ஆட்சியில் 20000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
ஆனால் 10 வருடங்களுக்குப் பிறகு தி.மு.க ஆட்சியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை வெறும் 3192 மட்டுமே. அதையும் முழுமையாக தேர்வு செய்து பணி ஆணை வழங்கவில்லை.
இதனால் தேர்வர்கள் காலிப்பணியிடங்களை உயர்த்த வேண்டும் என்று கடந்த 10 மாதங்களாக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வி அதிகாரிகள் என பலரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேர்வர்கள் இவ்வளவு கோரிக்கை வைத்த பின்பும் அரசு நிறைவேற்றும் என்றும் பார்த்தால் 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 841 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்றும் அதற்கான தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கும் என்றும் அறிவித்தது தேர்வர்களை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.
ஏற்கனவே நடைபெற்ற தேர்வுக்கான பணிகளே இன்னும் நிறைவடையாத நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை அதிகரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெட் மற்றும் நியமன தேர்வு தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
டெட் மற்றும் நியமனத் தேர்வு தேர்ச்சி பெற்ற சுமார் 37,000 தேர்வர்களின் 12 ஆண்டு கோரிக்கை இது ஆகும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுமா என தேர்வர்கள் காத்திருக்கிறார்கள்.
Comments
Post a Comment