"பட்ஜெட் ஏமாற்றம் அளித்தது"; 23-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் அறிவித்த ஜாக்டோ - ஜியோ
கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 23 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக மறியல் போராட்டம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில், ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சட்டசபை கூட்டத்தொடரில் பட்ஜெட் அறிவிப்பில், கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கையில் மறியல் போராட்டத்தை ரத்து செய்வதாக தெரிவித்தனர்.
இந்தநிலையில் இன்று தமிழக பட்ஜெட் வெளியானதை தொடர்ந்து, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டிடத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சேகர், பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் காந்திராஜ், தாஸ், தியாகராஜன், வின்சென்ட் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்ததாவது;
தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை இன்று (மார்ச்.14) சட்டமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. நேற்று பொதுப் பணித்துறை அமைச்சர் எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். முதலமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை எடுத்து சொன்னோம். இதுவரை இந்த நான்கு ஆண்டுகளில் 8 முறை முதலமைச்சரை நேரடியாக சந்தித்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தெளிப்படுத்தினோம். 4 ஆண்டுகளாக தொடர்ந்து பேசி கொண்டு தான் உள்ளோம். இதுவரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்த முதலமைச்சர்கள் எல்லாம் பேச்சு வார்த்தை என்றால் சாதகமான அறிவிப்பு அறிவிப்பார்கள்.
எங்களுக்கு நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்போடு இருந்தோம். நேற்றே எங்களுக்கு சலிப்பு ஏற்பட்டது. பட்ஜெட்டில் ஏதாவது அறிவிப்பு வரும் என்று நம்பி இருந்தோம், எந்த முதலமைச்சர் கடந்த காலத்தில் ஆதரவு அளித்தாரோ அவர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று நம்பி இருந்தோம். ஆனால் அதில் ஒரு இம்மி அளவு கூட நிறைவேற்றவில்லை. மிகுந்த ஏமாற்றத்தை அளித்து உள்ளது.
எங்கள் ஆசிரியர், அரசு ஊழியருக்கு ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை சொல்ல போராட்ட பதாகையை தூக்கி பிடிக்க வருகிற 23 ஆம் தேதி இதுவரை தமிழ்நாடு கண்டிராத வகையில் மாவட்ட தலைநகரங்களில் 6 லட்சம் வரை ஆசிரியர், அரசு ஊழியர் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். மார்ச் 30 ஆம் தேதி ஜாக்டோ ஜியோ குழு கூடும், அதுவரை அரசுக்கு நேரம் கொடுக்கிறோம். தொடர் மறியல் போராட்டம் நடத்துவோம் அதில் இருந்து பின் வாங்க மாட்டோம்.
எங்களை நம்புங்கள் என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார், எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது நாங்களும் நம்பினோம். முன்பு அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் அரசு காலத்திலும் பற்றாக்குறை பட்ஜெட் தான். அப்போது மட்டும் உபரியாக பட்ஜெட் இருந்ததா என்ன? நிதி பற்றாக்குறை என்று சொல்வதை ஒரு போதும் ஏற்க முடியாது, கொடுக்க மனமில்லை.
சரண் விடுப்பை அடுத்த ஆண்டு நிறைவேற்றுவதாக சொல்வது போகாத ஊருக்கு வழிவகுப்பதாக உள்ளது. சரண் விடுப்பு தடை ஆணையை நீக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். இதுதொடர்பான பட்ஜெட் அறிவிப்பு பெரிய ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது.
110 விதி கீழ் முதலமைச்சர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். டெட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சரை சில அதிகாரிகள் தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர் அதிகாரிகள் பேச்சை கேட்காமல் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
மருத்துவத்துறை, கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். உடனடியாக 31 ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேச வேண்டும் என்று தான் இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் 2004-2006 தொகுப்பூதிய பணிக்காலம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு, ஊக்க ஊதியத்தை பழைய முறைப்படி வழங்குதல், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 100 சதவீத கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்துதல் போன்ற எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம். இது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment