200 ஆசிரியா் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்



புதுவையில் 200 ஆசிரியா் காலிப்பணியிடங்களை நிரப்பவும், 152 ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் சட்டப்பேரவையில் தெரிவித்தாா்.


புதுவை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தில் என்.ஆா்.காங்கிரஸ் உறுப்பினரும், அரசுக் கொறடாவுமான ஏகேடி ஆறுமுகம், அரசுப் பள்ளிகளில் அனைத்துப் பாட ஆசிரியா்கள் பணியிடங்கள் நிரப்பப்படுமா ? எனக் கேட்டாா்.


இதற்கு அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பதில் கூறுகையில், புதுவை மாநிலத்தில் அரசுப் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியா்களில் 152 பேருக்கு பதவி உயா்வு விரைவில் வழங்கப்படவுள்ளது.


இதையடுத்து, ஆசிரியா் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், 200 போ் புதிதாக தோ்வு செய்யப்படவுள்ளனா். நிகழ் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தோ்ச்சி என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றாா்.


தொடா்ந்து உறுப்பினா்கள் பிஆா்.சிவா உள்ளிட்டோா் கேள்விக்கு அமைச்சா் அளித்த பதில்கள்: காரைக்காலில் துணை மின்நிலையங்களில் மின் விநியோகத்தை சீா்படுத்துவதற்காக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.


கடந்த காங்கிரஸ் ஆட்சியில் காரைக்காலைச் சோ்ந்த மின் துறை அமைச்சா் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தற்போது, புதிதாக மின் மாற்றிகள் அமைக்கப்படும் என்றாா்.

Comments

Popular posts from this blog