குரூப்-1, குரூப்-4 தேர்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் சொன்ன முக்கிய தகவல்!



குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் திட்டமிட்டபடி வெளியாகும் எனவும் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் போது காலி பணியிடங்கள் குறித்த முழு விவரமும் குறிப்பிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியிருக்கிறார்.


மேலும் தேர்வு எழுதுவோரின் வசதிக்காக விடைத்தாள் நடைமுறைகளை எளிமைப்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.


அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர் , இளநிலை நிர்வாகி, வனக் காவலாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் காலியாக உள்ளது. இந்த காலிப் பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.


துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய பதவிகளுக்கு குரூப் 2 மூலமும், உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் குரூப் 2 ஏ மூலமும் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், இந்திய ஆட்சிப் பணிக்கு அடுத்ததாக குரூப்-1 பதவிகள் கருதப்படுகிறது.


அதில், துணை கலெக்டர், உதவி வணிகவரி ஆணையர், உதவி இயக்குனர், துணை சரக பதிவாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை அலுவலர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் ஒன் மூலம் நிரப்பப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் நிறைவடைந்து தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் 2025 2026 ஆம் ஆண்டுக்கான 40,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என சமீபத்தில் பட்ஜெட்டில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். இதை அடுத்து எப்போது இது தொடர்பான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அரசு தேர்வுகளுக்கு தயாராகி வந்த தேர்வர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.


 இந்த நிலையில் ஏப்ரல் மாதம் திட்டமிட்டபடி குரூப் 1 தேர்வு மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் எனக் கூறியிருக்கிறார் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் எஸ்கே பிரபாகர்.


இது தொடர்பாக பேசி உள்ள அவர்," தமிழகத்தின் பல்வேறு அரசு துறைகளில் காலியாக இருக்கும் காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் குரூப் ஒன் தேர்வு மற்றும் குரூப் தேர்வு திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படும். தேர்வுக்கு விண்ணப்பிப்பது தேர்வு நாள், தேர்வு முடிவு உள்ளிட்டவை குறித்து முன்னதாகவே அறிவிக்கப்படும்.


 மேலும் தேர்வுக்கான தேதி வெளியாகும் போது மொத்தம் எத்தனை காலி பணியிடங்களுக்காக தேர்வு நடைபெறுகிறது என்ற முழு விவரமும் குறிப்பிடப்படும். மார்ச் மாத இறுதியில் அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் முழு விவரமும் வெளியிடப்படும்.


தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவரின் வசதிக்காக விடைத்தாள் நடைமுறையை எழுதாக்கி இருக்கிறோம். விடைத் தாள் நடைமுறையை எளிமைப்படுத்தி உள்ள நிலையில் இந்த ஆண்டு முதல் அனைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளும் புதிய நடைமுறையை பின்பற்றப்படுகிறது.


 இதன் மூலம் தேர்வர்கள் விடைத் தாளில் எந்த விதமான சந்தேகமும் குழப்பமோ இல்லாமல் பூர்த்தி செய்ய முடியும். தேர்வு முடிவுகளை விரைவாகவும் சிறு தவறு கூட இல்லாமல் நடத்த வேண்டும் என்பதில் டிஎன்பிஎஸ்சி உறுதியாக இருக்கிறது.


உதவி சுற்றுலா அலுவலர் உதவி பொறியாளர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தொழில் தேர்வுக்கான மதிப்பின் தரவரிசை பட்டியல் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போது ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் முழு பட்டியல் வெளியாகும். 


குரூப்-1 சி தேர்வின் கீழ் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வு முடிவுகள் உயர் நீதிமன்ற வழக்கு காரணமாக வெளியாகவில்லை. அதனை வெளியிட சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.


Comments

Popular posts from this blog