தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்: பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் பாதிப்பு
தமிழக முதல்வரால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் மேற்கொண்டனர்
இதன் காரணமாக அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, சரண் விடுப்பு சலுகை, ஊதிய முரண்பாடுகளை களைவது, காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்.25-ம் தேதி தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ- ஜியோ அறிவித்திருந்தது.
இதை தொடர்ந்து, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கயல்விழி செல்வராஜ், அன்பில் மகேஸ் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். இதன்படி இக்குழு நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
பேச்சுவார்த்தையின்போது, கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்துச் சொல்கிறோம். சற்று பொறுமை காக்குமாறு அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், அதற்கு நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், எங்கள் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காததால், பிப். 25-ம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டமும், மாவட்ட தலைநகரங்களில் மறியலுக்கு பதிலாக ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்றார்.
இதற்கிடையே, அரசுடனான பேச்சுவார்த்தை முடியும்வரை அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால், அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபடுவதில் ஜாக்டோ- ஜியோ உறுதியாக இருந்தது.
இந்தச் சூழலில் நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்துக்கு திடீரென வந்தார். அமைச்சர்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திவிட்டு புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு அமைச்சர்கள் குழுவினர் மீண்டும் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
பின்னர் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் கூறும்போது, எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என்றனர். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்களில் கிட்டதட்ட 40 சதவீதம் பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சென்னை தலைமைச் செயலகத்திலும், சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்திலும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தனர். எழிலகத்தில் ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திமுக தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி கோஷமிட்டனர். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தால் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன. பொதுமக்களும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
இதேபோல் அரசு பள்ளிகளில் பணிபுரியும் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆசிரியர் சாரா பணியாளர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மாநிலம் முழுவதும் பல இடங்களில் தொடக்கப் பள்ளிகள் காலையில் திறக்கப்படவில்லை. பிற்பகல் வேறு பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்டு திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அதேநேரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரிகள் ஆசிரியர்களும், முதுகலை பட்டதாரிகள் ஆசிரியர்களும் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment