'56 மொழிகளை விழுங்கியுள்ளது இந்தி; நாம் பலியாகக் கூடாது'- எச்சரிக்கை மணியடித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது.
உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''இந்தியாவில் முழுமையாக 56 மொழிகள் முழுமையாக விழுங்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் இந்தி மொழியால் விழுங்கப்பட்டிருக்கிறது.
இதே அமைச்சர் தர்மேந்திர பிரதான் சார்ந்திருக்கின்ற மாநிலமான ஒடிசாவில் இருக்கக்கூடிய ஒரியா மொழி உட்பட போஜ்புரி, ராஜஸ்தானி இப்படி நம்ம கண்ணுக்கு தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத 56 க்கும் மேற்பட்ட மொழிகள் இந்தியனுடைய திணிப்பால் அழிக்கப்பட்டிருக்கிறது.
அதுபோன்ற ஒரு நிலை நம்முடைய தாய் மொழிக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் உலகத் தாய்மொழி தினமான இன்று இந்த விளக்கத்தை சொல்லி இருக்கிறேன். எந்த விதத்திலும் பலியாகாமல் இருக்க வேண்டும்.
பல்வேறு மாநிலங்களின் அதிகாரிகளுடன் நாங்கள் பேசும்போது அவர்கள் சொல்வது மும்மொழி கொள்கை பிரச்சனையாக இருந்தாலும், மூன்று; ஐந்து; எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கொண்டு வரும் பிரச்சனையாக இருந்தாலும் எல்லா விதத்திலும் ஏற்றுக் கொண்டோம் என்று சொன்னால் அவர்கள் கரிக்குலத்தை கொண்டு வந்து விடுவார்கள்.
வரலாறு மாற்றப்படும். நம் வரலாற்றில் நல்லவர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களை எல்லாம் கெட்டவர்களாக காட்டுவார்கள். யார் யார் கெட்டவர்களோ அவர்களை நல்லவர்களாக, தியாகிகளாக காட்டுவார்கள்.
இவையெல்லாம் அதன் வழியாக உள்ளே நுழைந்து விடும். இதை உள்ளே நுழைய விடாமல் அரணாக காக்கும் இடத்தில் தமிழக முதல்வர் இருப்பதால்தான் இல்லாத நிபந்தனைகள் எல்லாம் விட்டுவிட்டு விவாதப் பொருளாக இருக்கக்கூடிய நிபந்தனைகளை வைத்துக் கொண்டு இதில் கையெழுத்துப் போட்டால் தான் பணம் தருவேன் என சொல்கிறார்கள்'' என்றார்.
Comments
Post a Comment