அகங்காரத்தில் பேசுகிறார் தர்மேந்திர பிரதான்.. NEP கூலி தொழிலாளிகளை உருவாக்கும்.. கஜேந்திரபாபு பேட்டி



மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.


இதனிடையே ஒருங்கிணைந்த கல்விக்கான மத்திய அரசு நிதியை தமிழ்நாட்டிற்கு அளிக்காமல், அதனை குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு திருப்பிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி இருந்தார். இந்த விவகாரம் தமிழக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில் வாரணாசியில் தொடங்கியுள்ள காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய கல்வி நிதி நிலுவையில் இருப்பது எனக்கு தெரியும். தமிழக அரசு அரசியல் காரணத்திற்காக தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கிறது.


மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும் போது தமிழக அரசு ஏன் ஏற்க மறுக்கிறது. தேசிய கல்விக் கொள்கையில் தமிழை படிக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. தமிழக அரசு மட்டுமே இருமொழி கொள்கை என்று மக்களை குழப்புகிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கல்வியாளர் கஜேந்திரபாபு பேசுகையில், இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆத்திரத்திலும் அகங்காரத்திலும் பேசி இருக்கிறார் என்பது அவரின் ஒவ்வொரு சொல்லில் இருந்தும் வெளிப்படுகிறது.


அரசமைப்பு சட்டத்தில் 6 முதல் 14 வயது உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வியை அடிப்படை உரிமை என்று சொல்லிவிட்டு, கல்வி அடிப்படை உரிமையாகியதால், நாங்கள் சிறுபான்மையினருக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்திவிட்டோம். ஏனென்றால் கல்வியை தான் கட்டணமில்லாமல் கொடுக்கிறோமே என்று கல்வி உக்கத்தொகையை நிறுத்திவிட்டார்கள்.


1 முதல் 8 வகுப்பு வரை குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் நாங்கள் நிதி அளிக்க மாட்டோம் என்று சொல்வது, குழந்தைகளை வஞ்சிக்கிற செயல். ஒரு மொழியை கற்பது என்பது தாய் மொழி மற்றும் சூழழியல் மொழி. இதுதான் குழந்தைகளுக்கு அறிவியல்பூர்வமான, இயல்பான கற்றல் மொழி. 3வதாக ஒரு மொழியை கற்பது தேவையின் அடிப்படையிலும், ஆர்வத்தின் அடிப்படையிலும் இருக்க வேண்டும்.


எந்த மொழியையும் கட்டாயப்படுத்த முடியாது. இத்தனை மொழிகளை குழந்தைகள் படித்துதான் ஆக வேண்டும் என்று இந்திய அரசு எங்கும் சொல்லவில்லை. தர்மேந்திர பிரதான் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படுவதாக கூறுகிறார். இந்திய அரசமைப்பு சட்டத்தை காக்க தமிழக அரசு போராடுகிறது. தர்மேந்திர பிரதானின் கூற்று நியாயமற்றது.


மும்மொழி கல்வி என்பது ஒரு முகமூடி. தேசிய கல்விக் கொள்கையில் கல்வியை பற்றி பேசவில்லை. இந்தியா முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகிறார்கள். தேசிய கல்விக் கொள்கை அரைகுறை திறன் கொண்ட கூலித் தொழிலாளர்களை உருவாக்குமே தவிர, கல்வியாளர்களை உருவாக்காது என்று தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog