குரூப் 2ஏ மெயின் தேர்வு 2006 பதவிக்கு 21,563 பேர் போட்டி: தமிழகம் முழுவதும் 82 மையங்களில் இன்று நடக்கிறது




குரூப் 2ஏ மெயின் தேர்வு தமிழகம் முழுவதும் 82 மையங்களில் இன்று நடக்கிறது. 2006 பதவிக்கு நடைபெறும் தேர்வை 21,563 பேர் எழுதுகின்றனர்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி)குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள 2,540 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வெளியிட்டது. 


இதில் குரூப் 2 பணியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர்(கிரேடு 2) என 534 பணியிடங்கள் அடங்கும்.


குரூப் 2ஏ பணியில் கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளர் 273, காவல் உதவியாளர், மருத்துவம் மற்றும் ஊரக நல சேவைகள் உதவியாளர், போக்குவரத்து உதவியாளர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து உதவியாளர், தொழிலாளர் உதவியாளர் என 48 துறைகளில் 2006 பணியிடங்கள் இடம் பெற்றிருந்தன.


 இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடந்தது. இத்தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் எழுதினர். இத்தேர்வுக்கான ரிசல்ட் டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது.


இந்நிலையில் குரூப் 2ஏ பதவியில் 2006 பதவிக்கான மெயின் தேர்வு இன்று நடக்கிறது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மெயின் தேர்வு தாள் II பொது அறிவு மற்றும் பொது திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் மற்றும் மொழி (பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம்) கொள்குறி வகை தேர்வு நடக்கிறது. மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தாள்I தமிழ்மொழி தகுதி தேர்வும் நடக்கிறது. 


பொது அறிவு தேர்வை 21,563 பேரும், பொதுத்தமிழ் தேர்வை 16,457 பேரும், பொது ஆங்கிலம் தேர்வை 5,106 பேரும் எழுதுகின்றனர். பிற்பகலில் நடைபெறும் தமிழ்மொழி தகுதி தேர்வை 21,607 பேர் எழுதுகின்றனர். 


இதற்காக தமிழகம் முழுவதும் 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog