பள்ளிக் கல்வித் துறையில் 47000 பேருக்கு ஒரே நாளில் இன்ப அதிர்ச்சி.. 'நிரந்தரமாகும்' அரசு ஊழியர்கள்
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையில் 47,013 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகப் பணியிடங்கள் தொடர் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது நிரந்தரப் பணியிடங்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 47,013 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "பள்ளிக்கல்வி தற்காலிக பணியிடங்கள் -10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் தற்காலிக பணியிடங்கள் தொடர்வதன் அவசியத்தை உள்ள ஆசிரியர் ஆராய குழு அமைக்கப்பட்டது - பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் மற்றும் ஆசிரியரல்லாத 47013 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும், 5418 பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது நாளடைவில் ஒழிவடையும் பணியிடங்களாகவும் (Vanishing post), 145 பணியிடங்களுக்கு 31.12.2028 வரை தொடர் நீட்டிப்பு வழங்கியும் - ஆணை வெளியிடப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத தற்காலிக பணியிடங்களை தொடர்ந்து நீட்டிப்பதன் அவசியம் குறித்து ஆராய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக உள்ள பணியிடங்கள் தொடர்வதன் அவசியம் குறித்து ஆராய பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் கூட்டம் 09.02.2024 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையில் 47,013 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்து அரசாணை வெளியிப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணிகளுக்காக 3,192 காலிப்பணியிடங்கள் தேர்வு நடந்தது. இதில் அனைத்து தேர்வுகள் முடிந்தது 2024 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுகள் வெளியாகி இருந்தது. தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த நவம்பர் மாதம் செய்தியாளர்களிடம் ஆசிரியர்கள் காலிப்பணியிடம் குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே நிரப்புவதற்கு அனுமதிக்கப்பட்டு, சான்றிதழ் சாரிபார்ப்பு முடிந்துள்ள 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும், 128 தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளார்கள் என்றும் கூறியிருந்தார்.
Comments
Post a Comment