அரசு கல்லூரிகளில் 4 ஆயிரம் பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை: உயர்கல்வி துறை அமைச்சர் தகவல்



தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில், தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரம் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.


 புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்கக்கூடிய தேடுதல் குழுவுக்கு அரசின் விதிப்படி 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், யுஜிசி பிரதிநிதியுடன்கூடிய தேடுதல் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசை ஆளுநர் வலியுறுத்தி உள்ளார். இது ஆளுநரின் பொறுப்புக்கு அழகல்ல.



உயர்கல்வித் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இதை சீர்குலைக்க வேண்டும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இடையூறுகளை ஆளுநர் செய்து வருகிறார். 


இதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல், சட்டரீதியாக அவரது செயல்பாடுகளை வரையறுக்க வேண்டிய நிலை தமிழக அரசுக்கு ஏற்படும். அந்த நிலை ஏற்படாமல் இருப்பதுதான் அவரது பதவிக்கு அழகாகும்.


தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் 2 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்களை தமிழக முதல்வர் நியமித்துள்ளார். மேலும் 750 கவுரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரம் நிரந்தரப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

Comments

Popular posts from this blog