'பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பை ஆளுநர் உரையில் இடம்பெறச் செய்ய வேண்டும்' - முதல்வருக்கு கோரிக்கை




திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்றும் இதை ஆளுநர் உரையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வருகின்ற ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டம் தொடங்குகிறது. இதில் 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணிநிரந்தரம் வாக்குறுதியை, முதல்வர் ஸ்டாலின் இந்த முறையாவது நிறைவேற்றுவார் என 12 ஆயிரம் குடும்பங்கள் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.


திமுக ஆட்சிக்கு வந்து 44 மாதங்கள் முடிந்து விட்டன. நான்கு ஆண்டுகள் முடிய போகிறது. ஆனாலும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவில்லை என்பதால் தொடர்ந்து போராடி வருகின்றனர். இனியும் தாமதம் செய்யாமல், அரசின் கொள்கை முடிவாக பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.


இந்த முடிவை முதல்வர் ஸ்டாலின் தான் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. தமிழக அரசின் நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக, 3,700 உடற்கல்வி, 3,700 ஓவியம், 2,000 கணினிஅறிவியல், 1,700 தையல், 300 இசை, 20 தோட்டக்கலை, 60 கட்டிடக்கலை, 200 வாழ்வியல்திறன் என மொத்தம் 12 ஆயிரம் பேர் தற்காலிக அடிப்படையில் 12,500 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.


2012 ஆம் ஆண்டு இந்தப்பணியில் அமர்த்தியது முதல்,தற்போது வரை 13 ஆண்டுகளாகவும், மே மாதம் சம்பளம், போனஸ், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, பணிக்காலத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரண நிதி, போன்றவை கிடையாது என்பதால், இந்த சொற்ப சம்பளத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.


வாழ்வாதாரம் மற்றும் பணிப்பாதுகாப்பு கருதி, காலமுறை சம்பளம், பணிநிரந்தரம் வழங்க வேண்டும். கடந்த காலங்களில் பகுதிநேர ஆசிரியர்கள், பகுதிநேர பணியாளர்கள், தினக்கூலி தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.


அதைப் போல, பள்ளிக்கல்வித்துறை மூலமாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் தற்காலிகமாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை, முறைப்படுத்தி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 


திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டுள்ளதால், இதனை முதல்வர் ஸ்டாலின் தனது அமைச்சரவையில் அரசின் கொள்கை முடிவாக எடுக்க வேண்டும். ஆளுநர் உரையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog