TRB சார்பில் உதவிப் பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித் தேர்வு




கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித் தேர்வை டிஆர்பி விரைவில் நடத்த இருக்கிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமால் நெட் அல்லது ஸ்லெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். 


நெட் தேர்வை யுஜிசி சார்பில் தேசிய தேர்வு முகமையும் (என்டிஏ) ஸ்லெட் தேர்வை அந்தந்த மாநில அரசின் சார்பில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகமும் நடத்தும். அந்த வகையில், தமிழகத்தில் ஸ்லெட் தகுதித் தேர்வை 2024 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடத்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. 


இதைத்தொடர்ந்து, ஸ்லெட் தேர்வுக்கான அறிவிப்பை அப்பல்கலைக்கழகம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டு அதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக ஏப்ரல் 1 முதல் 30 வரை பெற்றுக்கொண்டது. தேர்வு ஜூன் 7 மற்றும் 8-ம் தேதி கணினி வழியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஹால் டிக்கெட்டும் வெளியிடப்பட்டது. 


இந்நிலையில், தேர்வு தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக, தொழில்நுட்பக் காரணங்களால் ஸ்லெட் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், தேர்வெழுத தயாராக இருந்த ஸ்லெட் தேர்வர்கள் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளானார்கள்.


அதன் பிறகு 4 மாதங்கள் ஆகியும் ஸ்லெட் தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், ஸ்லெட் தேர்வை நடத்தும் பொறுப்பை தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்துள்ளது. 


எனவே, ஸ்லெட் தேர்வை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு பதிலாக ஆசிரியர் தேர்வு வாரியமே தேர்வை நடத்தும். ஸ்லெட் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் அனைத்து தரவுகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இதைத்தொடர்ந்து ஸ்லெட் தேர்வை விரைவில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறது.


 இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஸ்லெட் தேர்வை நடத்தும் பொறுப்பை தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்துள்ளது. தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். முன்பு அறிவிக்கபட்டவாறு கணினிவழியில் நடத்தலாமா அல்லது ஒஎம்ஆர் ஷீட் வடிவில் நடத்தலாமா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்,” என்றார்.

Comments

Popular posts from this blog