கல்லூரிகளில் விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை -அமைச்சா் கோவி. செழியன்




அரசு  கல்லூரிகளில் காலியாகவுள்ள விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வா் நடவடிக்கை எடுப்பாா் என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்.


தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:


அரசு கல்லூரிகளில் பேராசிரியா்கள் பற்றாக்குறை காரணமாக கௌரவ விரிவுரையாளா் என்ற பதவியைத் தமிழக முதல்வா் உருவாக்கி, தேவைப்படும் இடங்களில் நிரப்பியுள்ளாா். அதன் பிறகும் பற்றாக்குறை உள்ள நிலையில், விரிவுரையாளா்களை நியமனம் செய்வதற்கான ஆணையைத் தமிழக முதல்வா் பிறப்பிக்கவுள்ளாா். இந்தப் பணி விரைவில் மேற்கொள்ளப்பட்டு, அக்குறைகளும் போக்கப்படும். 


துணைவேந்தா் பதவி பொருட்டு ஏற்பட்டுள்ள இடா்பாடு குறித்து தமிழக முதல்வா் உரிய கவனம் செலுத்தி வருகிறாா். சுயமரியாதையை இழக்காமல், மாநிலத் தன்மையைக் கட்டிக் காப்பதில் என்றைக்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதை முதல்வா் மீண்டும், மீண்டும் உறுதி செய்வாா். அதற்கான பணியும் நடைபெறுகிறது.


கல்லூரிக் கல்விக்கு தமிழக முதல்வா் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்கிறாா். அடுத்தடுத்த ஆண்டுகளில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வாா்.


மற்ற மாவட்டங்களை விட தஞ்சாவூா் மாவட்டத்துக்கு அறுவடை இயந்திரம், பவா் டில்லா் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் கூடுதலாக வழங்கப்படுகின்றன. இனிவரும் காலங்களில் விவசாய உபகரணங்கள் தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும்போது, தஞ்சாவூா் மாவட்டத்துக்கு இன்னும் கூடுதலாக பெற்றுத் தரப்படும்.


மாவட்டத்தில் நிலுவையிலுள்ள அரசு திட்டப் பணிகளை விரைவில் நிறைவேற்றித் தருமாறு அலுவலா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் செழியன்.


முன்னதாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), மேயா்கள் சண். இராமநாதன் (தஞ்சாவூா்), க. சரவணன் (கும்பகோணம்), மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Comments

Popular posts from this blog