9 லட்சம் பேர் எழுதினர்.. யுஜிசி-நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு!
தேசிய தேர்வு முகமையினால் (NTA) யுஜிசி-நெட் (UGC NET) தேர்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 5-ம் தேதி வரை நடைபெற்றது.
இதற்கான இறுதி விடைக்குறிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில், முடிவுகள் நாளை வெளியாகும் என காலை தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வின் முடிவுகள் இன்று (அக்.17) வெளியிடப்பட்டன. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பி.எச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை சார்பில் இத்தேர்வு ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல் கட்ட நெட் தகுதித் தேர்வு கடந்த ஜூன் 19ம் தேதி நடத்தப்பட்டது.
ஆனால் இந்தத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததால் உடனடியாக அந்தத் தேர்வு ரத்து செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதன்பிறகு தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 9 லட்சம் பேர் எழுதினர்.
இந்நிலையில் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தேர்வு முடிவுகளை பட்டதாரிகள் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 எனும் உதவி மைய எண் அல்லது ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
Comments
Post a Comment