டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; 3.50 லட்சம் காலியிடங்களை காக்காய் தூக்கிச் சென்றதா?- பாமக கேள்வி


குரூப் 4 பணியிடங்களில், 15,000 பேரை நிரப்ப இடமில்லை என்றால் 3.50 லட்சம் காலியிடங்கள் இருப்பதாக ஸ்டாலின் கூறியது வடிகட்டிய பொய்யா என்று பா.ம.க.செய்தித் தொடர்பாளர் கே.பாலு கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாடு அரசுத் துறைகளில் குரூப் 4 பணியிடங்கள் லட்சக்கணக்கில் காலியாக இருக்கும் நிலையில், அப்பணிக்காக டி.என்.பி.எஸ்.சி நடத்திய போட்டித்தேர்வுகளின் மூலம் நிரப்பப்படவுள்ள இடங்களின் எண்ணிக்கையை 8,932-ல் இருந்து 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியிருந்தார்.


சமூக நீதியைக் கருத்தில் கொண்டு அவர் விடுத்த இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், இருக்கும் இடங்களைத்தானே நிரப்ப முடியும்? ஆளுநரை எதிர்த்து அன்புமணி இராமதாஸ் கேள்வி கேட்டாரா? என வினா எழுப்பியுள்ளார். மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராக பொறுப்பேற்று, இப்படி அறிக்கை வெளியிடும் நிலைக்கு உயர்ந்துள்ள கயல்விழி செல்வராஜ், அதற்காக அன்புமணி இராமதாஸ்க்குத்தான் முதலில் நன்றி கூற வேண்டும்.


பட்டியலினத்தவருக்கு அமைச்சரவையில் கடைசி இடங்கள்தான் வழங்கப்பட வேண்டுமா? முக்கியத் துறைகள் வழங்கப்படாதா? என்று அவர் தொடர்ந்து வினா எழுப்பி, அழுத்தம் கொடுத்ததன் பயனாகத்தான் திமுகவின் வளர்ச்சிக்காக நீண்ட காலமாக உழைத்து வந்த கயல்விழி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து, இப்போது மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். இந்த உண்மையை அமைச்சர் கயல்விழி செல்வராஜும் நன்றாக அறிந்திருப்பார்.


குரூப் 4 பணிகளில் 15 ஆயிரம் பேரை நிரப்பும் அளவுக்கு காலியிடங்கள் இல்லை என்று அமைச்சர் கூறியுள்ளார். அவர் கூறுவது பொய்யா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது பொய்யா? என்பது தெரியவில்லை. 2021ஆம் ஆண்டுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் 3.5 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.


காக்கைகள் தூக்கிச் சென்று விட்டனவா?


சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியவாறு மூன்று ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி, சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் போன்ற தேர்வு முகமைகள் வாயிலாக 32,774 பேருக்கு மட்டுமே அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட காலியிடங்களான 3.5 லட்சத்தில் வெறும் 32,774 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பணியிடங்களை காக்கைகள் தூக்கிச் சென்று விட்டனவா? அல்லது தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தது வடிகட்டிய பொய்யா?


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிய தலைவரை நியமிப்பதில் ஆளுனர் தேவையற்ற தாமதம் செய்ததாகவும், அதை அன்புமணி இராமதாஸ் கண்டிக்கவில்லை என்றும் அமைச்சர் கயல்விழி கூறியுள்ளார். வரலாறு தெரியாவிட்டால் இப்படித்தான் பேச வேண்டி வரும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த கா.பாலச்சந்திரன் 09.06.2022ஆம் நாள் ஓய்வு பெற்றார்.


டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தில் திமுக அரசுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே புதிய தலைவரை தேர்ந்தெடுத்து நியமித்திருக்க முடியும். ஆனால், தங்களுக்கு சாதகமான ஒருவரைத்தான் டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஓராண்டு காத்திருந்த திமுக அரசு, காவல்துறை தலைவராக இருந்த சைலேந்திரபாபு 30.06.2023ஆம் நாள் ஓய்வு பெறும் வரை ஓராண்டுக்கும் மேல் காத்திருந்து விட்டு, அவரது பெயரை ஆளுனருக்கு பரிந்துரைத்தது. ஆளுனர் தாமதித்ததற்கு பெயர் முட்டுக்கட்டை என்றால், திராவிட மாடல் அரசே ஓராண்டுக்கும் மேல் தாமதம் செய்ததற்கு என்ன பெயர்? அமைச்சர் கயல்விழி விளக்குவாரா?


அரைகுறை விவரங்களுடன் அறிக்கை வெளியிடுவதா?


தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காப்பதற்கான அமைப்புகளில் ஒன்று டி.என்.பி.எஸ்.சி. அது முடங்கக்கூடாது என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது. அதனால்தான் அந்த அமைப்புக்கு புதிய தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 23.12.2022, 25.06.2023 ஆகிய தேதிகளில் முதலமைச்சருக்கு ராமதாஸ் கடிதம் எழுதினார். 30.11.2023 அன்று அறிக்கை வெளியிட்டார். இந்த விவரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டு உறுதி செய்து கொண்டு கயல்விழி அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். அரைகுறை விவரங்களுடன் அறிக்கை வெளியிடுவது அமைச்சருக்கு அழகல்ல.


டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமனத்தில் ஆளுநர் தாமதம் செய்திருந்தால் அதைக் கண்டித்து முதல் அறிக்கை பா.ம.க.விடம் இருந்துதான் வந்திருக்கும். ஆனால், இந்த விவகாரத்தில் தெரிந்தே தவறு செய்தது திமுகதான். டி.என்.பி.எஸ்.சி அமைப்புக்கான தலைவராக இருந்தாலும், உறுப்பினராக இருந்தாலும் அவர்களை தேர்வு செய்ய தெளிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.


ஜெயலலிதா ஆட்சியின் போது டி.என்.பி.எஸ்.சிக்கு 11 உறுப்பினர்கள் விதிகளை மீறி நியமிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பா.ம.க. சார்பில் நான்தான் வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கில் திமுகவின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவனும் இணைந்து கொண்டார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 11 உறுப்பினர்களின் நியமனத்தை ரத்து செய்தது மட்டுமின்றி, டி.என்.பி.எஸ்.சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் மற்றும் தன்விவரக் குறிப்புகளைப் பெற்று அவற்றை ஆய்வு செய்துதான் நியமிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை பின்னாளில் உச்சநீதிமன்றமும் உறுதி செய்திருந்தது.


கடமையைச் செய்த ஆளுநர்


திமுகவும் தொடர்ந்த இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை பின்னாளில் ஆட்சிக்கு வந்த திமுக மதித்து இருக்க வேண்டும். ஆனால், எந்த விதிகளையும் பின்பற்றாமல், எந்த வெளிப்படைத்தன்மையையும் கடைபிடிக்காமல் டி.என்.பி.எஸ்.சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு தங்களுக்கு வேண்டியவர்களை நியமிக்கத் துடித்தது. இத்தகைய நியமனங்களை ஆளுனர் ஆய்வு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறியிருந்ததால், அதை ஆய்வு செய்து ஆளுனர் நிராகரித்தார். உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ஆளுனர் அவரது கடமையை செய்திருக்கும் நிலையில் அவரை ஏன் அன்புமணி இராமதாஸ் கண்டிக்க வேண்டும்?


இப்போதும்கூட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 7 உறுப்பினர் பதவிகள், அதாவது மொத்த உறுப்பினர் இடங்களில் பாதியளவு காலியாகக் கிடக்கின்றன. திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்களிலேயே இருவர் ஓய்வு பெற்று விட்டனர். தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு ஒரே ஒரு உறுப்பினர் பதவி கூட தேர்வாணையத்தில் இன்று இல்லை.


டி.என்.பி.எஸ்.சியில் இந்த அளவுக்கு சமூக அநீதிகள் தலைவிரித்தாடும் நிலையில், அதற்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கயல்விழி அவற்றைக் களைய ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா? துறைக்கு பொறுப்பு அமைச்சர் என்றாலும் கூட, டி.என்.பி.எஸ்.சி நியமனங்களில் அவருக்கு எந்த அதிகாரத்தையும் திமுக தலைமை வழங்காது. அப்படிப்பட்ட நிலையில், சமூக அநீதிக்கு எதிராக பேசாத அமைச்சர் கயல்விழிக்கு, அன்புமணி குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது?


3 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருக்கும் திராவிட மாடல் அரசு


டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் கயல்விழி சுட்டிக்காட்டிய அனைத்து நிகழ்வுகளையும் பா.ம.க. கண்டித்திருக்கிறது. அதற்கும் மேலாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 25.02.2023&ஆம் நாள் நடைபெற்ற குரூப் 2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளில் நடந்த குளறுபடிகளையும் கண்டித்தோம். திமுக தான் வாய்மூடி மவுனியாக இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து உயர்நிலைக்குழு விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் (தேர்தல் வாக்குறுதி & 485) என்று தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்ததே, அதை செய்யாமல் திராவிட மாடல் அரசு 3 ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருப்பது ஏன்?


டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதும் முறைகேடுகள் தொடர்கின்றன. அவை குறித்த அனைத்து விவரங்களும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவோருக்குத் தெரியும். அவற்றைக் களைய வேண்டும் என்று நினைத்தால், ஊடகங்கள் முன்னிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களிடம் இதுகுறித்து கருத்துக் கேட்கலாம். அதற்கு அமைச்சர் கயல்விழி தயாரா? இப்படியாக டி.என்.பி.எஸ்.சி அமைப்பில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமான இருக்கும்போது சமூகநீதிக்காக குரல் கொடுத்த அன்புமணி மீது குறை கூற அமைச்சர் கயல்விழி முயல்வது கண்டிக்கத்தக்கது. அவருக்கு சமூகநீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தவாறு 3.5 லட்சம் காலியிடங்களை நிரப்புவதுடன், 2 லட்சம் பணியிடங்கள் புதிதாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், திமுக தலைமை காட்டும் இடங்களில் கையெழுத்திடும் பணியை மட்டும் செய்து கொண்டு அவர் அமைதி காக்க வேண்டும்''.இவ்வாறு பாமக பாலு தெரிவித்துள்ளார்.



Comments

Popular posts from this blog