10-ம் வகுப்பு தனித் தேர்வர்கள் கவனத்திற்கு; அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளுக்கான பதிவு ஆரம்பம்!




தனித் தேர்வர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர, செப்டம்பர் 20 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: 


”நடப்பு கல்வியாண்டுக்கான (2024-25) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் நேரடித் தனித் தேர்வர்களும், ஏற்கெனவே தேர்வெழுதி அறிவியல் பாட செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் தற்போது பயிற்சிக்கு பதிவு செய்ய வேண்டும். அதன்படி தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களை அணுகி ரூ.125 கட்டணம் செலுத்தி செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.


அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தற்போது பதிவு செய்தவர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று, அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். பயிற்சி வகுப்பில் 80 சதவீத வருகைப்பதிவு இருக்க வேண்டும்.


 பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாள், மையம் போன்ற விவரங்களை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும், எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இயக்குநரகத்தால் பின்னர் வாய்ப்புகள் வழங்கப்படும்.” இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog