லோகோ பைலட் டூ ஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் வரை.. மொத்தம் 32,000 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்
இந்தியன் ரயில்வேயில் லோகோ பைலட், உதவி ஆய்வாளர், டெக்னீஷியன் என பல்வேறு பதவிகளுக்கு சுமார் 32,000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
எனவே விருப்பமுள்ளவர்கள் உடனடியாக பணிக்கு விண்ணப்பிக்கவும்.
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் 'இந்தியன் ரயில்வே' முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இது 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. ஒவ்வொரு நாளும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே அதற்கேற்றார் போல ரயில்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 50 ரயில்வே ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். அவர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த பணிகள் மந்த கதியில் நடைபெற்று வந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ரயில்வே பாதுகாப்பு துறையில் மட்டும் சுமார் 1.72 லட்சம் ஊழியர்களை உடனடியாக நிரப்ப வேண்டிய தேவை இருக்கிறது. தண்டவாள பராமரிப்பு பணிக்கு 87 ஆயிரம் பேரும், ஸ்டேஷன் மாஸ்டர் 64 ஆயிரம் பேர், டிரைவர்கள் 10 ஆயிரம், சிக்னல் பராமரிப்பு பணிக்கு 15 ஆயிரம் பேர் உடனடியாக தேவைப்படுகிறார்கள் என்று புள்ளி விவரங்களை அடுக்கி வருகின்றனர்.
இப்படி இருக்கையில்தான் லோகோ பைலட், உதவி ஆய்வாளர், டெக்னீஷியன் என பல்வேறு பதவிகளுக்கு சுமார் 32,000 காலிப்பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
ரயில் துறையில் ஆட்சேர்ப்பு குறித்து லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில்,
"ரயில்வே துறை கடந்த 2014 தொடங்கி 2024 வரை சுமார் 5.02 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. கடந்த 2004-2014 வரை முந்தைய யுபிஏ அரசாங்கம் வழங்கிய வேலைகளை விட இது 25% (4.11 லட்சம்) அதிகம். கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுக்கு பின்னர் கம்யூட்டர் அடிப்படையிலான டெஸ்ட் மூலம் சுமார் 1,30,581 விண்ணப்பதார்களுக்கு பணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி முதல், 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி வரை 211 நகரங்களில் உள்ள 726 மையங்களில் 7 கட்டங்களாக 1.26 கோடி விண்ணப்பதாரர்களுக்கு கம்யூட்டர் அடிப்படையிலான டெஸ்ட் நடத்தப்பட்டிருக்கிறது. அதேபோல, 2022 ஆகஸ்ட் 17 முதல் அக்டோபர் 11 வரை ஒரு மாதத்தில் ஐந்து கட்டங்களாக 191 நகரங்களில் உள்ள 551 மையங்களில் 1.1 கோடிக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் இந்த டெஸ்ட் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு பல்வேறு குரூப் 'சி' பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்படுகிறது. அதன்படி உதவி லோகோ பைலட், டெக்னீசியன், சப் இன்ஸ்பெக்டர், மற்றும் கான்ஸ்டபிள் என 32,603 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ரயில்வே அமைச்சகம் சார்பில் பணியாளர்களின் பணி நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Comments
Post a Comment