கிராம தபால் நிலையங்களில் 44228 பேருக்கு வேலை வாய்ப்பு!
இந்திய அஞ்சல் துறையில் உள்ள கிராம அஞ்சல் பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் , விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியா முழுவதும் அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 44228 கிராம அஞ்சல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 3,789 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.
அஞ்சல்துறையின் துறை சாராத சேவை அமைப்பு 150 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கிராமப்பகுதிகளில் முறையான முழு நேர ஊழியர்களுக்கு அவசியம் இல்லாத நிலையில் அடிப்படை, சிக்கன அஞ்சல் சேவை வழங்க இந்த அமைப்பு தேவைப்பட்டது. 1,29,346 துறை சாராத கிளை அஞ்சல் அலுவலகங்கள் இந்த கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை போஸ்ட் மாஸ்டர்கள் ஆகியோரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கிளை போஸ்ட் மாஸ்டர்கள் அல்லாத கிராம அஞ்சல் பணியாளர்கள், துணை மற்றும் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் பணிபுரிந்து வருகின்றனர். கிராம அஞ்சல் பணியாளர்களைப் பகுதி நேர ஊழியர்களாக தினமும் 3 முதல் 5 மணி நேர ஊழியர்களாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் தொழில்கள் மூலமாகவும் வருமானம் ஈட்ட வேண்டும். இந்தப் பணியாளர்கள் தங்களது 65வது வயது வரை பணியில் இருப்பார்கள்.
கல்வித்தகுதி :10ம் வகுப்பு தேர்ச்சி இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயம்.
மத்திய அரசு பணியாக இருந்த போதிலும் அஞ்சல்துறை துறை சாராத சேவை அமைப்பின் கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆள்சேர்கை, படிகள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும். இருப்பினும் அஞ்சல் துறையில் முழு நேர ஊழியர்களுக்கான சம்பள விகிதம் இவர்களுக்குப் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது : 18 முதல் 40 வயது வரை இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. இந்த பதவிக்கான விண்ணப்பச் செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும்.
இந்த கிராம அஞ்சல் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் அஞ்சல் வட்டத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது
Comments
Post a Comment