'தேர்வு எழுதுங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள்' - ஆசிரியர்களுக்கு எதிராக சாட்டையை சொடுக்கும் உச்ச நீதிமன்றம்
'தகுதி தேர்வு எழுத விரும்பாத ஆசிரியர்கள் ராஜினாமா செய்துவிடலாம்' என பீகார் உள்ளாட்சி ஆசிரியர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்ததோடு, தகுதி தேர்வை ரத்துசெய்யக்கோரிய ஆசிரியர்களின் மனுவையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு, குழந்தைகளின் கல்விக்கு ஆதரவாக பேசியது. "நாட்டில், குறிப்பாக பீகார் மாநிலத்தில் குழந்தைகளின் கல்வியில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ஆனால் எந்த ஆசிரியரும் அரசின் விதியை பின்பற்ற விரும்பவில்லை என்றால், அவர்கள் ராஜினாமா செய்யட்டும். மாணவர்களுக்கு சேவை செய்ய விரும்புவோர் மட்டும் தகுதித் தேர்வை எழுதட்டும்" என்றது.
ஆசிரியர்கள் போராட்டம்
பீகார் மாநிலத்தில் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கீழான பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தங்கள் திறனை சோதிக்கும் தகுதி தேர்வை வலியுறுத்தும் பீகார் பள்ளி பிரத்யேக ஆசிரியர் விதிகள், 2023-ஐ எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். அவர்கள் சார்பில் பரிவர்தங்கரி பிரரம்பிக் ஷிக்ஷக் சங் மற்றும் பீகார் ராஜ்ய பிரரம்பிக் ஷிக்ஷக் சங்கம் ஆகிய இரு சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன.
பீகார் அரசாங்கத்தின் கூற்றுப்படி, தகுதி தேர்வு என்பது விருப்பத்தின் அடிப்படையிலானது. தேர்வில் பங்கேற்க விரும்பாதவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. இருப்பினும், தகுதிபெறும் ஆசிரியர்கள், மாநில அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய பலன்களை பெறுவார்கள். எனினும் தகுதித் தேர்வை எதிர்த்து ஆசிரியர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள்.
இன்றைய தினம் ஆசிரியர் சங்கங்களின் மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற அமர்வு, "தேசத்தை கட்டியெழுப்புபவர்கள் ஆசிரியர்கள். பீகார் போன்ற மாநிலத்தில், ஆசிரியர்களை மேம்படுத்த அரசு முயற்சி செய்கிறது. ஆனால் அதனை நீங்கள் அனுமதிக்கவில்லை. இவற்றை உங்களால் எதிர்கொள்ள முடியாது போனால் வெளியேறுங்கள்" என்று கடுமை காட்டியது.
உச்ச நீதிமன்றம்
மேலும் "ஆசிரியர் சேவை என்பது ஓர் உன்னதமான தொழில். ஆனால் சம்பளம் மற்றும் பதவி உயர்வில் மட்டுமே நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள். இங்கே பல லட்சம் பேருக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் திறமைகளை மேம்படுத்த முன்வர மறுக்கிறீர்கள். நமது கிராமப்புறப் பள்ளிகள் மற்றும் நம் நாட்டில் உள்ள கல்வியைப் பாருங்கள். ஒரு முதுகலை பட்டதாரி விடுப்பு கடிதம் எழுத முடியாது தவிக்கிறார்.
ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்த அரசு எதையாவது செய்யும்போது, அதற்கு எதிராக நீதிமன்றம் மூலம் சவால் விடுவீர்கள். எல்லா மாணவர்களும் தனியார் அல்லது சர்வதேச பள்ளிகளுக்குச் செல்ல முடியாது. அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எதிர்காலத்தை பரிசீலித்து உரிய முடிவெடுங்கள்" என்று அறிவுரை தந்தது.
Comments
Post a Comment