டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நாளை நடைபெறுகிறது: 6,244 காலி இடங்களுக்கு 20 லட்சம் பேர் போட்டி
தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4தேர்வு நாளை நடைபெறுகிறது. மொத்தம் 6,244 காலி இடங்களுக்காக நடத்தப்படும் இத்தேர்வை சுமார்20 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக் காவலர், பில்கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் மற்றும் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் என பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜனவரி 30-ம் தேதி வெளியிட்டது. ஆன்லைனில் இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை பெறப்பட்டன.
குரூப்-4 தேர்வுக்கான அடிப்படை கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்ச்சி என்றபோதிலும், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்ஃபில் முடித்தவர்கள் என உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் உட்பட சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 2 வாரங்களுக்கு முன்பு ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் குரூப்-4 எழுத்து தேர்வு நாளை (ஜூன் 9) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தேர்வுக் கூடத்துக்கு சென்றுவிட வேண்டும் என தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
2025 ஜனவரியில் தேர்வு முடிவுகள்: இத்தேர்வில், பொது தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு மற்றும் நுண்ணறிவு திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண் ஆகும். டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அறிவித்தபடி, குரூப்-4 தேர்வு முடிவுகள் வரும் 2025 ஜனவரி மாதம் வெளியிடப்படும்.
தற்போது 6,244 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் மேல் அதிகரிக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குரூப்-4 தேர்வுக்கு நேர்காணல் கிடையாது. எனவே, எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் அரசு வேலை கிடைப்பது உறுதி.
குரூப்-4 தேர்வை தொடர்ந்து, ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் 28-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
Comments
Post a Comment