Schools Open: ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக தகவல்



வரும் ஜூன் 10ம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாகத் தெரிகிறது.


தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவுபெற்றது. அதேபோல், நான்காம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் வரை, ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை முழு ஆண்டுப் பரீட்சை நடந்துமுடிந்தது. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை தேர்வு நடந்து முடிந்தது. 


தமிழ்நாட்டில் கோடை காலம் மார்ச் மாத இறுதியில் இருந்து ஆரம்பித்து, ஏப்ரல் மாதத்தில் கணிசமான வெயில் பதிவு இருந்து, ''அக்னி நட்சத்திரம்'' என்னும் கத்தரி வெயில் காலமான மே மாதத்தில் உச்சகட்ட வெப்பம் பதிவாகும்.


வாட்டி வதைத்த வெயில்:


அந்த வகையில் இந்தாண்டு ஆரம்பத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரிக்க தொடங்கிவிட்டது.


அதிலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் 100 டிகிரியைக் கடந்து பதிவாகி இருந்தது. குறிப்பாக ஈரோடு, கரூர், வேலூர், சேலம், தர்மபுரி, மதுரை, திருத்தணி, திருப்பத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் அதிகமாக வெப்பத்தின் தாக்கத்தை உணர முடிந்தது. தற்போது எல்லாம் வெயிலின் தாக்கம் சொல்லவே வேண்டாம் எனுமளவிற்கு கடுமையாக இருந்து வருகிறது. நாம் வெளியில் சென்றுவிட்டு வந்தால், வீட்டிற்குள் வந்து சுருண்டு படுத்துவிட வேண்டிய நிலைதான் உள்ளது. வேலூர், ஈரோடு, கரூரில் இதுவரை 105 டிகிரியை கடந்து வெயில் பதிவாகி வருவதைப் பார்க்கமுடிகிறது.


இந்நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரிவெயில்(அக்னி நட்சத்திர காலம்), கடந்த 4ம் தேதி தொடங்கி, 25 நாட்கள் வரை நீடிக்கும். இந்த கத்தரி வெயில் காலம் மே 29ஆம் தேதியுடன் விடைபெறும்.


வானிலை ஆய்வு மையத்தைப் பொறுத்தவரையில், அக்னி நட்சத்திரம் என்று அவர்கள் குறிப்பிடுவதில்லை. இருந்தாலும், கோடை காலத்தின் இறுதி பகுதியான மே மாதத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதை அவர்கள் மறுக்கவில்லை.


மே மாதத்தின் இறுதியில் அதிகபட்ச வெப்பம் பதிவாக வாய்ப்பு:


அந்த வகையில் இந்த கால கட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், அனல் காற்றுடன் அதிகபட்ச வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அக்னி நட்சத்திர காலத்தில், கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி திருத்தணியில் 113.9 டிகிரி வெயில் பதிவானதுதான் அதிகபட்ச வெயில் பதிவாக கூறப்படுகிறது. அதற்கு முன்னர் 2003ஆம் ஆண்டில் சென்னை மற்றும் வேலூரில் 113 டிகிரியும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


அதேபோல், மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்து, ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்பதால், மாணவர்களுக்கு தேவையற்ற பதற்றத்தைக் குறைக்க, அதன் பின் பள்ளிகள் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.


இதனிடையே ஜூன் 1ஆம் தேதி, இந்த வெப்பத்தினாலும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பின் காரணமாகவும் பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்காமல், வரும் ஜூன் 10ஆம் தேதி, தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாணவ - மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog