நாளை முதல் கலந்தாய்வு ... கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.
இவை குறிப்பிட்ட கல்லூரிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கல்லூரிகள் தரவரிசைப் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை தேதி தொடர்பான தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகள் தொடங்கப்படும்.
இதில் முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே 28ம் தேதி நாளை செவ்வாய்க்கிழமை முதல் மே 30ம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன்பிறகு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலும், 2ம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை மாதம் 3ம் தேதி தொடங்குகின்றன. 2023-24ம் கல்வியாண்டு, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அதில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 252 மாணவர்கள், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 274 மாணவிகள், 78 திருநங்கைகள் என 2 லட்சத்து 43 ஆயிரத்து 604 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த கூடுதல் தகவல்களை மாணவர்கள் /www.tngasa.in/ எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 04424343106 / 24342911 எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment