TNPSC Group 4 பயிற்சித் தொடர்: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 1!




TNPSC Group 4: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக, குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ.வுக்கு, பலர் பயின்று வருகின்றனர்.


இந்நிலையில் புவியியல் பகுதியில் சராசரியாக 8 மதிப்பெண்கள் வரை கேட்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, புவியியல் பகுதி என்பது மிகவும் எளிமையான பகுதி என்பதால் அதில் இருந்து இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4க்காக தெரிந்துகொள்ளவேண்டிய பகுதிகளை சிறு சிறு குறிப்புகளாகப் பார்ப்போம். 


சூரியக் குடும்பம்(Solar System): சூரியக் குடும்பம் என்பது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். நாம் ஆங்கிலத்தில் சொல்லும் சோலார் சிஸ்டம் என்ற சொல்லானது, ''Sol''என்ற லத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது. சோலார் என்ற சொல்லானது ''சூரியக்கடவுள்'' என்னும் அர்த்தத்தைத் சுட்டிக் காட்டுகிறது. 


பெருவெடிப்பு(Big Bang): பெருவெடிப்பு என்பது ஒரு வெடிப்பு நிகழ்ந்ததன்மூலம், வானில் கணக்கற்ற நட்சத்திரங்களும், சிறு சிறுகோள்களும் உருவாகிய நிகழ்வு ஆகும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தது தான், பேரண்டம் (Universe) என அழைக்கப்படுகிறது. இதனை அண்டம் (Cosmos) என்றும் கூறுகின்றனர். 


பேரண்டத்தின் படிநிலை(Hierarchy Of The Universe): பேரண்டத்தின் படிநிலையில் பேரண்டம், விண்மீன் திரள் மண்டலம், சூரியக் குடும்பம், கோள்கள், துணைக்கோள்கள் எனப் படிப்படியான வரிசை இருக்கிறது.


கோள்கள்: (Planets): ''கோள்'' என்றால் சுற்றி வருபவர் என்று பொருள். சூரியக்குடும்பத்தில் சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்கள் சுற்றி வருகின்றன. எனவே, அதனை கோள்கள் என்கிறோம். குறிப்பாக, புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய ஒன்பது கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. 


சூரியனின் அளவு: சூரியனின் அளவு என்பது 1.3 மில்லியன் மடங்கு பூமியைத் தனக்குள் கொண்டு இருக்கும் அளவில், மிகப் பெரியது ஆகும். 


சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சுமார் 150 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது. ஒரு விண்கலத்தை நாம் மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் சூரியனை நோக்கி பூமியில் இருந்து அனுப்பினால், அது சூரியனைச் சென்றடைய 21 ஆண்டுகள் பிடிக்கும் என வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 


ஒளியாண்டு(Light Year): ஒரு ஒளியாண்டு என்பது, ஒளி ஓராண்டில் பயணிக்கக் கூடிய தொலைவு ஆகும். ஒளியின் திசைவேகம் நொடிக்கு 3 லட்சம் கி.மீ.ஆகும். ஆனால், ஒலியானது விநாடிக்கு 330 மீட்டர் என்ற வேகத்தில் மட்டுமே பயணிக்கும். 


மிகவும் வெப்பமான கோள் வெள்ளி: சூரியக் குடும்பத்தில் வரிசையில் இரண்டாவதாக இருக்கும் கோள், வெள்ளி. சூரியனுக்கு அடுத்து இருக்கும் புதனை விட, வெள்ளி தான் வெப்பம் அதிகம் கொண்ட கோளாக கருதப்படுகிறது. ஏனெனில், வெள்ளிக்கோள் தான், மிக அடர்வான வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது. 96 விழுக்காட்டுக்கும் அதிகமான கார்பன்-டை-ஆக்ஸைடு இந்த வளிமண்டலத்தில் உள்ளது. இந்த வளிமண்டலத்தில் சல்ஃபூரிக் அமில மேகங்களின் எதிரொளிப்பும் உள்ளது.


சூரிய அண்மை(Perihelion): பூமி தன் சுற்றுவட்டப் பாதையில் சூரியனுக்கு மிக அருகில் வரும் நிகழ்வு, சூரிய அண்மை எனப்படுகிறது. 


சூரிய சேய்மை(Aphelion): பூமி, தன் சுற்றுவட்டப்பாதையில் சூரியனுக்குத் தொலைவில் காணப்படும் நிகழ்வு, சூரிய சேய்மை எனப்படுகிறது.

Comments

Popular posts from this blog