பட்டதாரி ஆசிரியர் நியமனம் எப்படி? எப்போது? பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு





தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நியமனம் செய்வதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேரடி பணி நியமனம் செய்யும் போது ஒவ்வொரு ஆண்டும் பின்பற்ற வேண்டிய கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன் அரசாணையாக வெளியிட்டுள்ளார்.


அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: 'பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களிடையே பொது மாறுதல்கள் வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய கொள்கை நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.


பள்ளிக் கல்வி இயக்ககத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் வரும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாடப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் வகுத்து அறிவுறுத்தல் வழங்கும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.


பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் உள்ள அனைத்துப் பாடப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் பணிநாடுநர்களுக்கு நேரடி பணி நியமனம் செய்யப்படும்போது, பின்பற்ற வேண்டிய கால அட்டவணை ஒன்றினைக் கீழ்க்கண்டவாறு வெளியிட்டு அரசு ஆணையிடுகிறது.


அதன்படி, தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களை மே மாதம் 1 ஆம் தேதிக்குள் கண்டறிந்து கணக்கீடு செய்ய வேண்டும். அவ்வாறு கண்டறியப்பட்ட உபரி ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு மே மாதம் 31 ஆம் தேதிக்குள் பணிநிரவல் செய்ய வேண்டும்.


அதே போல் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் மாதம் 30 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதனை தொடர்ந்து வரும் ஜூலை 1 ஆம் தேதிக்குள் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை மதிப்பீடு செய்து, அந்த பணியிடங்களை நிரப்பிட கோரும் கருத்துருக்களை ஜூலை 15 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 


அவ்வாறு அனுப்பப்படும் கருத்துருக்கள் மீது செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அரசாணை வெளியிடப்படுவதோடு, பணிநியமனம் செய்யப்படும் உத்தேச பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியக்குழு மற்றும் அதன் நிதித்துறை உறுப்பினரின் ஒப்புதலை உறுதி செய்து அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.


வெளியிடப்படும் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வை நடத்தி, தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் வெளியிடப்பட வேண்டும், மே மாதம் 1 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பு, தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் இறுதிப் பட்டியல் ஆகியவற்றை வழங்க வேண்டும். 



இந்த அரசாணையை பள்ளிக்கல்வி இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும்." இவ்வாறு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog