
தேவையா பிளஸ் ஒன் பொதுத் தேர்வு? தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு புதிய முயற்சிகள் உற்சாகத்துடன் திட்டமிடப்படுகின்றன. அக்கறையுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பொறுப்புடன் கண்காணிக்கப்படுகின்றன. களத்தில் நிகழும் குறைபாடுகள் கண்டறியப்படுகின்றன. மீளாய்வுகள் செய்யப்படுகின்றன. சரிப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பாராட்டுக்குரியவை இவை. பொதுக் கல்வியில் அக்கறை கொண்ட கல்வியாளர்களை, வல்லுநர்களை, கலைஞர்களை, செயல்பாட்டாளர்களைப் பள்ளிக் கல்வித் துறை தனது குடையின் கீழ் ஒருங்கிணைத்துக் கல்விப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதுவும் நம்பிக்கையூட்டும் அம்சம்தான். கருத்து வெளிப்பாடு அவசியம்: இதில் சில விலகலை, சறுக்கலை, முரண்களை, அபத்தங்களைக் கவனப்படுத்த வேண்டியது, தரமான பொதுக் கல்வியில் நம்பிக்கை கொண்டவர்களின் கடமையாகிறது. ஏனெனில், நமது பள்ளிக் கல்வித் துறை நிர்வாகக் கட்டமைப்பு வேடிக்கையானது. இதன் அதிகாரப் படிநிலை மேலே இருப்பவர்களுக்கு வாயையும் கீழே இருப்பவர்களுக்குக் காதுகளையும் ஒதுக்கீடு செய்துள்ளது. வாய் அருளப்பட்டவர்களுக்குக் காதுகள் அவசியமில்லை. இது முதல் விதி. காதுகள் வித...