பொதுத்தேர்வு மாணவர்களுக்கு இணையதள முகவரி வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பாடவாரியாக ஒரு மதிப்பெண் வினாக்கள் அடங்கிய வினாத்தொகுப்பு, ஆன்லைனில் உருவாக்கி, இணையதள முகவரியை, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாடத்திட்ட குழு, பாட கருத்தாளர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்கள் கொண்ட குழு சார்பில், பாடவாரியாக வினாத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பாடத்தையும் முழுமையாக படித்தால் மட்டுமே, கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். தவறாக பதிலளித்தால், விடை திரையில் தோன்றும் வகையில், இ-வினாத்தாள் தொகுப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் ஹைடெக் ஆய்வகத்தில் பதிவிறக்கி, பயிற்சி பெற அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 198 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்குள்ள கம்ப்யூட்டர் ஆய்வகத்தில், வினாத்தொகுப்பு பதிவிறக்குவதற்கான, இணையதள முகவரி, க்யூ.ஆர்., கோடு ஆகியவை, பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தவும், பொதுத்தேர்வுக்கு பாடங்களை முழுமையாக படிக்க வைக்கும் வகையிலும், வினாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, வாரத்திற்கு இருபாடவேளைகளாவது மாணவர்கள், ஆன்லைன் தேர்வில் பங்கேற்க, ஏற்பாடு செய்யுமாறு தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுத்தேர்வு மாணவர்களுக்கான வினாத்தொகுப்பு, GeoGebra என்ற பிரத்யேக சாப்ட்வேர் உதவியோடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதள முகவரி, க்யூ.ஆர்.கோடு, ஹைடெக் ஆய்வகத்தில் பதிவிறக்கி பயன்படுத்தலாம்.
தற்போது, பள்ளிக்கல்வி இணையதளங்களில் பல்வேறு தகவல் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக பணிகள் நடப்பதால், நவம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து, ஆன்லைன் வினாத்தாளில் மாணவர்கள் பயிற்சி பெற, வழிவகை செய்யப்படும் என்றனர்.
Comments
Post a Comment