கரும்பலகை துடைக்கவும், கழிவறையை கழுவக் கூட தயார்..! - டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கண்ணீர் பேட்டி!
மாதம் 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணி கொடுத்து, கரும்பலகை துடைக்க சொன்னாலும், கழிவறையை கழுவச் சொன்னாலும் செய்யத் தயராக இருப்பதாக 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பணி நியமனம் கோரி 6-வது நாளாக தொடரும் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டம்.
பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில், 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பினர், பணி நியமனம் வழங்கக்கோரித் தொடர்ந்து 6-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து 2013-ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன் கூறுகையில், "டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் எங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாக இருக்கிறது.
எங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற்று முடிந்துள்ளது. அதேபோல, அரசாணை 149 ரத்து செய்ய வேண்டும் என்பதும் எங்களது கோரிக்கையாக உள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களை ஆதரித்த திமுக, தற்போதும் ஆதரிக்கும் என நம்புகிறோம்.
திமுக-வின் தேர்தல் வாக்குறுதியில், 2013-இல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வு நடத்துவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சியாக இருந்த போது பல்வேறு இடங்களில் எங்களுக்கு ஆதரவாக வாக்குறுதி அளித்தார். கடந்த 10 ஆண்டுகளாக வேலைக்காகக் காத்திருக்கிறோம். அரசிடம் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதிலும் தீர்வானது எட்டப்படவில்லை. எங்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும். மாதம் 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணி கொடுத்து, பள்ளியில் கரும்பலகையைத் துடைக்கச் சொன்னாலும், கழிவறையைக் கழுவச் சொன்னாலும் செய்யத் தயாராக இருக்கிறோம். எங்களின் அரசுப் பள்ளிக்கு நாங்கள் பணிக்குச் செல்ல வேண்டும். அது வரையில் எங்களின் போராட்டம் தொடரும்" என தெரிவித்தார்.
Comments
Post a Comment