வசூல் ராஜா திரைப்பட பாணியில் எஸ்.ஐ தேர்வில் முறைகேடு.. சிக்கிய பாசமலர்கள்...




வசூல் ராஜா MBBS திரைப்பட பாணியில் எஸ்.ஐ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட முயன்ற இளைஞரிடமும், அவருக்கு உதவிய அவரின் தங்கையிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று (ஆக. 26) எஸ்ஐ பணிக்கு தேர்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட மையத்தில் 3, 559 பேர் தேர்வு எழுதினர்.


இந்நிலையில், அந்த தேர்வு மையத்தில் உள்ள ஒரு அறையில், தேர்வர் ஒருவர் ஏதோ பேசிக்கொண்டே தேர்வு எழுதுவதாகவும், இதனால் தங்களுக்கு இடையூறாக உள்ளதாகவும், அங்கு தேர்வெழுதியவர்கள் தேர்வு கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.


அதன்பேரில், இளைஞரிடம் விசாரித்தபோது, ரஜினியின் எந்திரன் திரைப்படத்தில், மருத்துவ தேர்வு எழுதும் ஐஸ்வர்யா ராய்க்கு, ரோபோவான சிட்டி ப்ளூ டூத் ட்ரான்ஸ்மிட்டர் மூலம் விடைகளை சொல்வது போல இந்த இளைஞரும் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது.


வசமாக சிக்கிய அண்ணன் - தங்கை


முறைகேட்டில் ஈடுபட்ட ஊத்தங்கரை அருகே அச்சூரை சேர்ந்த நவீன், முகக்கவசம் அணிந்து கொண்டு காதில் கருவி ஒன்றை பொருத்தி இருந்தது கண்டறியப்பட்டது. அந்த கருவியை வாங்கி ஆய்வு செய்தபோது மறு முனையில் பெண் ஒருவர் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது.


இதனால், அதிர்ச்சியடைந்த தேர்வு அதிகாரிகள் நவீனை அட்கோ காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு விசாரணை மேற்கொண்டதில், வாய்ஸ் ட்ரான்ஸ்மீட்டர் பயன்படுத்தி தேர்வு எழுதியதை அவர் ஒப்புக்கொண்டார். தேர்வு எழுத தனது தங்கை இந்திரலேகா உதவியதாகவும், யூடியூப் பார்த்து வாய்ஸ் டிரான்ஸ் மீட்டர் மூலம் வினாக்களுக்கு அவர் பதில் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார். அதன்பேரில் நவீன் மற்றும் அவரது தங்கையிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்திலும் கமல் இதே போன்று மருத்துவ தேர்வு எழுதுவது போல காட்சிகள் இருக்கும் என்பது நினைவுகூறத்தக்கது.

Comments

Popular posts from this blog