நான்காண்டு பி.எட் பட்டப்படிப்பு அறிமுகம்! ஆகஸ்ட் 16 முதல் மாணவர் சேர்க்கை!
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தில் 6 சிறப்பு பாடப்பிரிவுகளுடன் நான்காண்டு ஒருங்கிணைந்த B.Ed பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நான்காண்டு ஒருங்கிணைந்த B.Ed பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த நான்காண்டு பட்டப்படிப்பில் பி.எஸ்.சி., பி.எட், பி.ஏ, பி.எட் ஆகிய பாடப்பிரிவில் ஆறு பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான பி.எட் பட்டப்படிப்பினை படிப்பதற்கு 10+2+3 என்ற அடிப்படையில் இளநிலை பட்டப் படிப்பினை முடித்திருக்க வேண்டும். ஆனால் தேசிய கல்விக் கொள்கையில், இளங்கலை பட்டப்படிப்புடன், பி.எட் பட்டப்படிப்பும் சேர்த்து நான்கு ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.எட் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகம் 2023-24 ஆம் கல்வி ஆண்டு முதல் ஒருங்கிணைந்த நான்காண்டு பி.எட் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனவும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் NCTE விதிமுறைகளின் படி பி.எஸ்.சி., பி.எட், பி.ஏ. பி.எட் படிப்புகளில் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என அதன் பதிவாளர் நாதசுப்பிரமணி அறிவித்துள்ளார்.
அதில், "மாணவர்களின் சேர்க்கை செய்யப்படும் விபரத்தை, ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் மாணவர்களுக்குரிய கட்டணத்தை வசூல் செய்து அதனையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்.
மேலும், மாணவர்களுக்கான வகுப்புகள் ஒரு பருவத்திற்கு 125 நாட்கள் நடைபெற வேண்டும் என்றும் இணைப்பு பெற்ற கல்லூரிகள் மாணவர்களிடம் விண்ணப்பத்தை பெற்று பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்களின் விபரங்களை, கல்லூரி முதல்வர் சரி பார்த்து உறுதி செய்ய வேண்டும் என்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்வதற்கு முன்னர், ஒவ்வொரு மாணவரின் சேர்க்கைக்கு தகுதியான சான்றிதழ்களான, 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ் மாற்று சான்றிதழ், கல்லூரி சீருடையில் எடுக்கப்பட்ட மாணவரின் புகைப்படம் மற்றும் கையொப்பங்களை தனித்தனியே ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
குறிப்பாக மாணவர்களின் பெயர்களை தமிழில் பதிவு செய்ய வேண்டும் என்றும் மாணவரின் ஜாதி விபரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. மாணவரின் பெயர், பாலினம், பிறந்த தேதி, சாதியின் உட்பிரிவு, மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண், தாய் தந்தையின் பெயர் விலாசம், மாவட்டம் மற்றும் பின்கோடு உடன் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
மேலும் மாணவர் பி.எஸ்.சி.பி.எட் படிப்பில் தேர்ந்தெடுத்துள்ள பாடத்தையும் மொழியும் பதிவு செய்ய வேண்டும் என கோரப்பட்டு உள்ளது. அனைத்து விவரங்களையும் மாணவர் குறித்து தனித்தனியாக வைத்து சான்றிதழ் எதிர்பார்ப்பிற்கு பல்கலைக்கழகம் கேட்கும் நாளில் அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த நான்காண்டு பட்டப்படிப்பில் பி.எஸ்.சி. பி.எட் கணக்கு பி.எஸ்.சி. பி.எட் உடற்கல்வியியல் பி.எஸ்சி. பி.எட் பயாலஜிக்கல் சயின்ஸ், பி.ஏ. பிஎட் சோசியல் சயின்ஸ், பி.ஏ. பி.எட் தமிழ், பி.ஏ. பி.எட் ஆங்கிலம் ஆகிய 6 பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments
Post a Comment