37 கல்லூரிகளில் ஒரு இடம் கூட பூர்த்தியாகவில்லை: காலாவதியாகும் இன்ஜினியர் படிப்பு!
தமிழ்நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகப்பெரும் அளவில் குறைந்து வருகிறது. குறிப்பாக 37 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பு என்பது ஒரு காலத்தில் மாணவர்களின் கனவு படிப்பாக இருந்தது. மேலும் பெற்றோர்களும் இன்ஜினியர் படிப்பை பெரிதும் விரும்பியதால் அதிக அளவிலான மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு இன்ஜினியரிங் கல்லூரிகளை நோக்கி ஓடினர். இதனால் அந்த நேரங்களில் தமிழ்நாடு முழுவதும் பல இன்ஜினியரிங் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதனால் இன்ஜினியரிங் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
ஆனால் அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாணவர்கள் ஒரே காலகட்டத்தில் இன்ஜினியரிங் படிப்பை முடித்து வெளிவந்தனர். இதனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்ஜினியரிங் படிப்பை நோக்கி செல்லக்கூடிய மாணவர்களினுடைய எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரும் அளவில் குறைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 442 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 57 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு அரசு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துகிறது. ஜூலை 22 ஆம் தேதி தொடங்கிய கலந்தாய்வு செப்டம்பர் 3ம் தேதி நிறைவடைய இருக்கிறது.
தற்போது வரை இரண்டு கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 442 பொறியியல் கல்லூரிகளில் 208 பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீத இடங்கள் நிரம்பி உள்ளன. 126 பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் நிரம்பி உள்ளன. மேலும் நல்ல கட்டமைப்பு, உயர்தர கல்வி, நவீன வகுப்பறை, அதிக கம்ப்யூட்டர் வசதி கொண்ட சில கல்லூரிகளுக்கு மட்டும் 80 சதவீத இடங்கள் பூர்த்தி அடைந்துள்ளன.
அதே நேரம் தமிழ்நாட்டில் உள்ள 37 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட தற்போது வரை பூர்த்தி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேநிலைத் தொடர்ந்தால் வருங்காலத்தில் பல பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூடக்கூடிய சூழல் உருவாகும்.
மேலும் சில பொறியியல் கல்லூரிகள் மாற்று பாட பிரிவை கற்பிக்கும் கல்லூரிகளாக மாற அரசிடம் அனுமதி கோரியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment