தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?- டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றன.
அதன்படி, கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப்-2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வை தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் வரும் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்த ஏப்.28-ம் தேதி வெளியிடப்பட்டது. முதன்மை தேர்வுகள் வருகிற ஆகஸ்டு மாதம் 1- முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இது தவிர, 10 வன பயிற்சியாளர், 178 உதவி பிரிவு அலுவலர், 731 கால்நடை உதவி அறுவைசிகிச்சை நிபுணர், 11 மாவட்ட கல்விஅலுவலர், 9 உதவி வன பாதுகாவலர், 27 நூலகர், 121 வேளாண் அலுவலர் மற்றும் குரூப்-3 பிரிவில் ஒருங்கிணைந்த சிவில் சேவை துறையில் 33 பணியிடங்களுக்கும், புள்ளியியல் துறையில் 217 பணியிடங்களுக்கும் ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்பட உள்ளன.
மேலும் சாலை ஆய்வாளர் பணியிடங்கள், ஒருங்கிணைந்த பொறியியல் துறை பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்வளத் துறையில் 66 ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஜூலை 11, 12ம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment