5 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள ‘ஸ்லெட்’ தேர்வு இனி ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் உயர் கல்வித்துறை தகவல்
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வாக பல்கலைக்கழகமானிய குழு (யு.ஜி.சி.) மூலம் தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் 2 முறை தேசிய தகுதி தேர்வு என்று அழைக்கப்படும் 'நெட்' தேர்வை நடத்தி வருகிறது.
இதேபோல், மாநிலங்களின் சார்பில் ஏதாவது ஓர் பல்கலைக்கழகத்தின் மூலம்‘ஸ்லெட்' என்று கூறப்படும் மாநில அளவிலான தகுதி தேர்வு (The State Level Eligibility Test (SLET)) நடத்தப்படுகிறது.
இந்த ஸ்லெட் தேர்வு தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்ப டாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக செய்திகளும் வெளியாகின.
இந்த நிலையில் இதுகுறித்து உயர் கல்வித்துறை சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, ஸ்லெட் தேர்வை இனிவரும் ஆண்டுகளில் முறையாக ஆண்டுக்கு ஒரு முறை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் இப்போது தேர்வு நடத்த முடியாத நிலை இருக்கிறது.
ஏற்கனவே 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் அந்த பணியிடங்களுக்கு தேர்வு நடத்த முடியாத நிலை இருக்கிறது.
விரைவில் கோர்ட்டில் தீர்வு எட்டப்படும் போது அந்த பணியிடங்களுக்கான தேர்வும் நடத்தப்படும். அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகம் மூலம் ‘ஸ்லெட்' தேர்வு நடத்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும். அதன் தொடர்ச்சியாக ஆண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து தேர்வு நடத்தப்படும்.
மேலும் கல்லூரி உதவிபேராசிரியர் காலி பணியிடங்களும் ஆண்டுதோறும் நிரப்பப்படும் என்று உயர் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
Comments
Post a Comment