'அரசாணை 149-ஐ ரத்து செய்க; பணி நியமன ஆணை வழங்குக' - பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் கோரிக்கை!




திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, அரசாணை 149-ஐ ரத்து செய்துவிட்டு, 177வது தேர்தல் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 12ஆயிரத்து 483 ஆசிரியர்கள் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். 2013ஆம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் பெறுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் (Teacher Eligibility Test - TET) தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகாலமாக பணி நியமனம் என்பது வழங்கப்படவில்லை. 2012ஆம் ஆண்டில் முதன்முதலில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு மட்டுமே பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.


2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் ஆசிரியர் பணி நியமனம் பெற முடியாமல் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என 40-க்கும் மேற்பட்ட போராட்டங்களை பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நடத்தியுள்ளனர். 


கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், 2013 முதல் 2019ஆம் ஆண்டு வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மீண்டும் ஒரு தகுதி தேர்வு எழுத வேண்டும் என அரசாணை 149 கொண்டுவரப்பட்டது.


ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என வருந்தும் ஆசிரியர்கள்: இதற்கு பகுதி நேர ஆசிரியர் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின், அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அரசாணை 149-யை கடுமையாக எதிர்த்தார். 


திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசாணை 149 ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கை 177-ல் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் 3 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் இதற்கு தீர்வு காணப்படவில்லை என பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


இந்த நிலையில், சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகில் பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


இதில், தமிழ்நாடு முழுவதும் இருந்து 300-க்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பெண் ஆசிரியைகள் உட்பட பலரும் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளனர். விடியும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


அரசாணை 149-ஐ ரத்து செய்க; பணி நிரந்தரம் செய்க: இது குறித்து பேசிய 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளங்கோவன், "திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, அரசாணை 149-ஐ ரத்து செய்துவிட்டு, 177வது தேர்தல் அறிக்கையை அமல்படுத்த வேண்டும். 


2013ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நான்கு ஆசிரியர் தகுதித் தேர்விலும் வெற்றி பெற்று எங்களுக்கு பணி ஆணை வழங்கவில்லை. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 20ஆயிரத்திற்கும் குறைவான பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளோம். எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் அரசுக்கு என்ன சிக்கல்? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.


விரைந்து பணி ஆணை வழங்காவிடில் தொடர் போராட்டம்: பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியிடம் பல முறை இது தொடர்பாக சந்தித்து கோரிக்கை வைத்தோம். ஆனால், முதலமைச்சரிடம் கூறி இருக்கிறேன் என மட்டுமே சொல்கிறார். 


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகள் ஆவதால் வயதும் ஆகி கொண்டே இருக்கிறது. விரைவில் பணி ஆணை வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறோம். எங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்" என கூறினார்.

Comments

Popular posts from this blog