'காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்'... நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம், மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதற்கு தணிக்கையாளர் சச்சிதானந்தம் வரவேற்ற நிலையில், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத்தலைவர் அ.சேகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா ஆகியோர் தலைமையில் பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன், இணை இயக்குனர் (தொழிற்கல்வி) ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத அமைச்சுப் பணியாளர்கள் சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தி, தொழிற்கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்தனர். இதனையடுத்து மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடப்புத்தகங்கள் இன்னமும் முழுமையாக கிடைக்காததால், அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1000 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments
Post a Comment