அரசுப்பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள விளையாட்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை ஆய்வு செய்து வருகிறது.
இதுகுறித்து விரைவில் அறிவிப்போம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 2023-24ம் கல்வி ஆண்டில் உடற்கல்வி செயல்பாடுகள் மற்றும் பல்வேறு நிலை போட்டிகள் நடத்துதல் தொடர்பான விவாதம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களின் கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி யோகா போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற தமிழ்நாடு பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: விளையாட்டுக்கென தனியாக வழிகாட்டி புத்தகம் தயாரிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆசிரியர் தேர்வு முறையில் மாற்றம், புதிய நியமனம் குறித்து பார்த்தால், அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நடந்து சான்று சரிபார்ப்பு நடத்துவதற்குள் யாராவது வழக்கு தொடர்ந்துவிடுகின்றனர். அதனால் சில தடை ஏற்படுகிறது. வழக்கு வந்துவிட்டால் பணி நிற்கிறது. மிக விரைவில் அறிவிப்பு வெளியிட்டு புதிய ஆசிரியர்கள் நியமனம் நடக்கும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
Comments
Post a Comment