தமிழகம் முழுவதும் 66,70,825 பேர்... தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியீடு!
தமிழகம் முழுவதும் 66,70,825 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் முழுவதும் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும், சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாநில தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. மேலும், சென்னையில் கூடுதலாக சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இயங்கி வருகிறது.
இதில், பட்டப் படிப்பு வரையான கல்வித் தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், முதுநிலை படிப்பு, பொறியியல், மருத்துவம் உட்பட தொழில் படிப்பின் தகுதியை சென்னை அல்லது மதுரையில் உள்ள மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து வரவேண்டும். இந்த சமயத்தில் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் 66,70,825 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த மே 31-ஆம் தேதியின்படி வேலை வாய்ப்பாக பதிவுதாரர்களது விவரங்களில், ஆண்கள் 30 லட்சத்து 98 ஆயிரத்து 879 பேர், பெண்கள் 35 லட்சத்து 71,680 பேர், மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 266 பேர் உள்ளனர். வயது வாரியாக விவரங்களின்படி, 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 17 லட்சத்து 39 ஆயிரத்து 747 பேர், 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28 லட்சத்து 33 ஆயிரத்து 380 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, 31 முதல் 45 வயது வரை உள்ள அரசு பணி வேண்டி காத்திருக்கும் வேலை நாடுநர்கள் 18 லட்சத்து 44 ஆயிரத்து 601, 46 முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவு தாரர்கள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 705 பேர் உள்ளனர். இதில், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6391 பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ள நிலையில், மொத்தம் 66,70,825 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மேலும், லை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 654 பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர். இதில் ஆண்கள் 97 ஆயிரத்து 583 பேர் என்றும் , பெண்கள் 49 ஆயிரத்து 71 பேர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment