NEET Exam: தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வில் அதிக கேள்விகள்.. எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் இருந்து மட்டும் நீட் தேர்வில் 165 கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
: நீட் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில், 165 கேள்விகள் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து இடம் பெற்று இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இயற்பியல் பாடத்திற்கான 50 கேள்விகளும் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று (மே. 7) நாடு முழுவதும் நடைபெற்றது. நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவர்களும், 13 திருநங்கைகள் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் இந்த நீட் தேர்வை எழுதினர்.
தமிழ்நாட்டில் 31 நகரங்களில் நடைபெற்ற இந்த நீட் தேர்வை 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் எழுதினர். இந்தத் தேர்வினை எழுதுவதற்குப் பல்வேறு கெடுபிடிகள் இருந்தன. இதனிடையே தேர்வினை எழுதி விட்டு வந்த மாணவர்கள் கூறும்போது, இயற்பியல், வேதியியல் பாடத்திற்கான கேள்விகள் கடினமாக இருந்ததாக தெரிவித்தனர். மேலும் விலங்கியல், தாவரவியல் பாடத்திற்கான கேள்விகள் எளிதாக இருந்ததாகக் கூறினர்.
இந்த நிலையில், நீட் தேர்வில் 11, 12ஆம் வகுப்பு பாடத்தில் இருந்து சம அளவில் கேள்விகள் கேட்கப்பட்டதோடு, தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து 165 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், ஆகிய 4 பாடங்களில் இருந்து கேள்விகள் இடம்பெற்றன.
ஒவ்வொரு பாடத்திலிருந்து 50 கேள்விகள் என்ற அடிப்படையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுள் மாணவர்கள் 180 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். 20 கேள்விகளை விருப்பத்திற்கு ஏற்ப Choiceல் விடலாம். அந்த வகையில் தமிழ்நாடு பாடத் திட்டத்திலிருந்து 165 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், 35 கேள்விகள் என்சிஇஆர்டி பாடப் புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.
வேதியியல் பாடத்தில் மொத்தம் 50 கேள்விகளுள் 34 கேள்விகள் மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டன. மீதமுள்ள 16 கேள்விகள் என்சிஆர்டி பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்பட்டன. இயற்பியல் பாடத்தில் மொத்தம் 50 கேள்விகளுள் 50 கேள்விகளும் மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து இடம்பெற்று உள்ளன.
தாவரவியல் பாடத்தில் இருந்து 50 கேள்விகளில் 42 கேள்விகள் மாநிலப் பாடத்திட்டத்திலும், 8 கேள்விகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்திலும் இடம்பெற்று உள்ளன. விலங்கியல் பாடத்தில் 50 கேள்விகளில் மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து 39 கேள்விகளும், என்சிஆர்டி பாடத்திட்டத்திலிருந்து 11 கேள்வியும் கேட்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.
ஒட்டுமொத்தமாக நீட் நுழைவுத் தேர்வில் தமிழக பாடத் திட்டத்தில் இருந்து 165 கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 11, 12ஆம் வகுப்பில் மாநிலப் பாடப்புத்தகத்தில் இருந்து சம அளவில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எனவே, தமிழ்நாடு அரசின் பாடப் புத்தகத்தை படித்தாலே நீட் தேர்வினை எளிதில் எழுதி வெற்றிப் பெற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
Comments
Post a Comment