+2வுக்கு பிறகு என்ன படிக்கலாம்?
வணிகவியல் படிப்புகள்
வளமான வாழ்க்கைக்கு வணிகவியல் படிப்புகள் - CA
பிளஸ் 2க்கு பின் தேர்வு செய்யும் கல்விதான், வாழ்க்கைக்கு பயனுள்ளதாக அமையும். தற்போது தமிழகத்தில் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் , 148 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், 424 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 658 கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகள் மூலம் ஆண்டுக்கு 3 லட்சத்து 35 ஆயிரத்து 418 மாணவ, மாணவிகள் கல்வி கற்கின்றனர்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் குறைந்த செலவில் படித்து முடித்ததும் உடனடியாக வேலை வாய்ப்பு உள்ளதால் கலை, அறிவியல் படிப்புக்கு எப்போதும் மவுசு உண்டு. அதிலும் குறிப்பாக, பிகாம், பிபிஏ, போன்ற பாடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வந்துள்ளது. பொறியியல் படித்தால் அவர்கள் படித்த துறையின் அடிப்படையில் மட்டுமே வேலை கிடைக்கும். தமிழகத்தில் ஆண்டுதோறும் 1.50 லட்சத்துக்கு மேற்பட்ட பொறியாளர்கள் படித்து முடிக்கின்றனர். அவர்களில் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு மட்டுமே நல்ல சம்பளத்துடன் பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது. மற்றவர்கள் வேலைக்காக போராட வேண்டியுள்ளது.ஆனால், கலை அறிவியலை பொறுத்தளவில், அவர்கள் படிக்கும் துறை மட்டுமல்லாமல் எந்த துறையிலும் நிச்சயம் வேலைவாய்ப்பு உண்டு. தற்போது மென்பொருள் நிறுவனங்கள் கலை அறிவியல் படிப்பவர்களையும் வேலைக்கு சேர்த்து வருகின்றன. எனவே கலை அறிவியல் படிக்கும் மாணவர்களும் மென்பொருள் நிறுவனங்களில் பணி செய்ய வாய்ப்பு உள்ளது.
இது தவிர சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ, ஏ.சி.எஸ். போன்ற படிப்புகளைப் படித்து முடிக்கும் வணிகவியல் மாணவர்களுக்கு வாய்ப்புகள் வாசல் கதவருகே காத்துக்கிடக்கும்.
அவை பற்றிய சில தகவல்கள்:
சி.ஏ., (சார்ட்டர்ட் அக்கவுன்டன்டுகள்) CA - Chartered Accountants
தனி நபர்கள், அறக்கட்டளைகள், தொழிற்சாலைகள் என அனைத்து தரப்பினரும் சட்டபூர்வமாகத் தங்களது வருமானத்தை அரசுக்குத் தெரிவிக்க உதவுபவர்கள் சார்ட்டர்ட் அக்கவுன்டன்டுகள். சார்டர்டு அக்கவுன்டன்ட் (சி.ஏ.) துணையின்றி வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது.பொருளாதாரம், நிர்வாகவியல், தகவல் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களால் சார்டர்டு அக்கவுன்டன்டுகளுக்கு மேலும் பல தொழில் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
2ஜி அலைக்கற்றை வழக்கில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழலை அம்பலப்படுத்தியது கணக்குத் தணிக்கை அறிக்கைதான்.
சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் முடித்தவர்கள் சொந்தமாக கணக்கு தணிக்கைப் பணியைத் தொடங்கலாம். அல்லது ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்களில் பணியை மேற்கொள்ளலாம். கணக்குத் தணிக்கைப் பணிக்கு மட்டுமல்லாமல், வர்த்தக அமைப்புகள் வேண்டிய கடன் உதவிகளைப் பெறுவதற்கு ஆவண ரீதியாக உதவுதல், நிதிநிலைக் கணிப்புகளைத் தயாரித்தல் உள்ளிட்ட பல பணிகளை சி.ஏ.க்கள் வழங்குவார்கள். கணக்குத் தணிக்கை உள்ளிட்ட பணிகளுடன் நிதி மற்றும் பிற ஆதாரங்களை வர்த்தக நிறுவனங்கள் பெருக்கிக் கொள்வதற்கும், செயல்திறனை அதிகரித்துக் கொள்ளவும், உரிய நிர்வாக ஆலோசனைகளை இவர்கள் வழங்குவார்கள். இது தவிர நிதி நிர்வாகம், திட்டமிடல், நிதிக்கொள்கை வகுத்தல், திட்ட அறிக்கைகள் தயாரித்தல், தொழிலகங்களுக்கு சாதகமான சூழலை ஆராய்தல்ஆகியவை சி.ஏ.க்களின் பணிகளாகும்.
வரும் 2023ம் ஆண்டில் இந்தியாவிற்கு 14 லட்சம் சி.ஏ., பட்டதாரிகள் தேவைப்படுகின்றனர்.
சி.ஏ. எனப்படும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் படிப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா எனப்படும் ஐ.சி.ஏ.ஐ. எனப்படும் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.
சி.ஏ. என்பது பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற ஒரு தொழிற்படிப்பு. ஆனால், சி.ஏ. படிப்பை தனியே கற்றுத்தர பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் மாதிரி தனிப்பட்ட கல்லூரிகள் எதுவும் கிடையாது. இந்தப் படிப்பை வீட்டில் இருந்தபடியே படிக்கலாம். வீட்டில் இருந்து படிக்க முடியாத மாணவர்கள், சி.ஏ. படிப்பை கற்றுத்தரும் இன்ஸ்டிட்யூட் அல்லது கோச்சிங் வகுப்பில் சேர்ந்து படிக்கலாம். பல பெற்றோர்கள் சி.ஏ., படிக்க விரும்பும் தங்கள் பிள்ளைகளை, பி.காம்., போன்ற இளநிலை பட்டப்படிப்புகளை படிக்க வைக்கின்றனர். கல்லூரிக்கு சென்று கொண்டே, தொழில் படிப்பான சி.ஏ.,வை படிப்பது சிரமம். சி.ஏ., படிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள், பி.காம்., பட்டப்படிப்பை தொலைதூரக் கல்வியில் படிக்கலாம்..
பட்டப் படிப்பிற்கு பின் தான் சி.ஏ., படிக்க வேண்டும் என்ற நடைமுறை மாறிவிட்டது. தற்போது பிளஸ் 2 முடித்தவர்களும், ஐ.சி.ஏ.ஐ., நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றால், சி.ஏ., படிக்கலாம். பிளஸ் டூ முடித்தப்பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் சி.ஏ. படிப்பை படித்துவிடலாம்.
இந்தப் படிப்பில் மொத்தம் நான்கு நிலைகள் உண்டு.
1. காமன் புரபசியன்ஷி (சி.பி.டி.),
2. இண்டக்ரேட்டட் புரபஷனல் காம்படன்ஸ் கோர்ஸ்
3. ஆர்ட்டிக்கிள்ஷிப் டிரெய்னிங்,
4. இறுதித் தேர்வு
1. காமன் புரபசியன்ஷி (சி.பி.டி.),
காமன் புரபஷியன்சி டெஸ்ட் என்பது சி.ஏ. படிப்பில் சேருவதற்கான அறிமுகத் தேர்வு / நுழைவுத் தேர்வு ஆகும். சி.ஏ. நுழைவுத்தேர்வு நடைபெறுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பே அதற்கான பதிவை மாணவர்கள் செய்ய வேண்டியது அவசியம். இந்தத் தேர்வு எழுத பதிவு செய்ய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் நுழைவுத் தேர்வு எழுத பதிவு செய்வதைவிட பதினொன்றாம் வகுப்பு முடித்த பிறகு சி.ஏ. படிப்பில் பதிவு செய்வது சிறந்தது. அப்போதுதான், சி.ஏ. பாடங்கள் பற்றிய புரிதல் இருக்கும்.சி.ஏ. படிப்பில்தான் சேர வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள், பதினொன்றாம் வகுப்பில் கணக்குப்பதிவியல், வணிகவியல், பொருளியல், கணிதம் அல்லது வணிகக் கணிதம் அல்லது கணிப்பொறி அறிவியல் பாடங்கள் அடங்கியப் பிரிவை தேர்வு செய்து படிப்பது நல்லது. சி.பி.டி. தேர்வில் பொருளியல், வணிகவியல் சார்ந்த கேள்விகள் அதிகம் என்பதால், அந்தப் பாடங்களை பிளஸ் டூ வகுப்பில் தேர்வு செய்து படித்திருந்தால் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும்.மற்றபடி, எந்தப் பிரிவை தேர்வு செய்த படித்த மாணவர்களும் கண்டிப்பாக சி.ஏ. படிப்பில் சேர்ந்து படிக்க முடியும்.தினமும் குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் திட்டமிட்டு படித்தால், சி.ஏ., தேர்வுகளில் வெற்றி பெறுவது கடினமல்ல சிபிடி தேர்வுக்குப் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், பிகாம் பட்டப் படிப்பில் 49 சதவீதத்துக்குக் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள், பிற பட்டதாரிகளும் (மதிப்பெண் வரம்பு உண்டு) கலந்து கொள்ளலாம். பி.காம். பட்டத்தில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்தத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு உண்டு. சி.பி.டி. தேர்வானது தேசிய அளவில் நடைபெறுவதால், கேள்விகள் முழுக்க ஆங்கிலத்தில் இருக்கும். இந்த நுழைவுத் தேர்வு மொத்தம் 200 மதிப்பெண்களுக்கானது. ஃபண்டமெண்ட்டல் ஆஃப் அக்கவுண்டிங், மெர்க்கன்டைல் லா, ஜெனரல் எகனாமிக்ஸ், குவாண்டிடேட்டிவ் ஆப்டிட்யூட் என்று நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதில் ஃபண்டமெண்ட்டல் ஆஃப்அக்கவுண்டிங் பகுதிக்கு 60 மதிப்பெண்களும், மெர்சன்டைல் லா பிரிவுக்கு 40 மதிப்பெண்களும் ஒதுக்கப்படுகின்றன. அதேபோல, ஜெனரல் எகனாமிக்ஸ் மற்றும் குவாண்டிடேட்டிவ் ஆப்டிட்யூட் பகுதிகளுக்கு தலா 50 மதிப்பெண்கள் என மொத்தம் 200 மதிப்பெண்கள். தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் மாநில கல்வி வாரியம், மெட்ரிகுலேஷன் மற்றும், ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும். தேர்வு காலை 2 மணி நேரமும் மாலை இரண்டு மணி நேரமும் நடைபெறும். காலையில் நடைபெறும் தேர்வுக்கு 100 மதிப்பெண்களும், பிற்பகல் நடைபெறும் தேர்வுக்கு 100 மதிப்பெண்களுமாக ஒதுக்கப்படுகிறது. கேள்விகள் முழுவதும் அப்ஜக்ட்டிவ் முறையில் கேட்கப்படும். அக்கவுண்டிங் 60, சட்டம் 40, பொருளியல் 50, கணிதம் மற்றும் புள்ளியியலில் இருந்து 50 மதிப்பெண்கள் என, 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். சரியாக பதில் அளிக்கும் கேள்விக்கு ஒரு மதிப்பெண்ணும், தவறாக விடையளித்தால், 0.25 மதிப்பெண்களும் கழிக்கப்படும். குறைந்தது, நூறு மதிப்பெண் பெற வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும், 30 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். சி.ஏ. படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறுகிறது.தேர்வு முடிவடைந்து 40 நாட்களுக்குள் தேர்வு முடிவு வெளிவந்துவிடும். சி.பி.டி. தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அந்த மாணவர், தேர்ச்சியடைந்தவராக கருதப்படுகிறார். ஆனால், ஒவ்வொரு பாடத்திலும் கண்டிப்பாக 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை ஒரு பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அந்த மதிப்பெண் டிஸ்டிங்க்ஷனாக கருதப்படும். அதே வேளையில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்றிருக்கும் பாடத்தில், மாணவர் தோல்வி அடைந்தவராகவே கருதப்படுகிறார். அந்தப் பாடத்தை மறுபடியும் படித்து தேர்வு எழுத வேண்டியது வேண்டியது அவசியம்.
2. இண்டக்ரேட்டட் புரபஷனல் காம்படன்ஸ் கோர்ஸ் (ஐ.பி.சி.சி.)
சி.ஏ. படிப்பை பொறுத்தவரை முதல் படியான சி.பி.டி. தேர்வில் தேர்ச்சியடைந்தவுடன் இரண்டாம் படிக்கு பதிவு செய்துவிடவேண்டும். இண்டக்ரேட்டட் புரபஷனல் காம்படன்ஸ் கோர்ஸ் எனப்படும் ஐ.பி.சி.சி. எனும் இரண்டாம் பிரிவில் மொத்தம் 7 தாள்கள். இரண்டுப் பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கும் இந்தப் பிரிவில் முதல் பிரிவில் அக்கவுண்டிங் (100 மதிப்பெண்கள்), லா எதிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் (160 மதிப்பெண்கள்), காஸ்ட் அக்கவுண்டிங் அண்ட் ஃபைனான்சியல் மேனேஜ்மெண்ட் (100 மதிப்பெண்கள்), டேக்சேஷன் (100 மதிப்பெண்கள்) என்று நான்கு தாள்களும், இரண்டாம் பிரிவில் அட்வான்ஸ் அக்கவுண்டிங் (100 மதிப்பெண்கள்), ஆடிட்டிங் அண்ட் அஸ்யூரன்ஸ் (100 மதிப்பெண்கள்), இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் ஸ்ட்ரேடஜிக் மேனேஜ்மெண்ட் (100 மதிப்பெண்கள்) என்று மூன்று தாள்களும் உண்டு. இரண்டாம் கட்டத் தேர்வில் 7 தாள்களுக்கான மொத்த மதிப்பெண்கள் 760 மதிப்பெண்கள். இதிலும் மாணவர்கள் கண்டிப்பாக 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றாக வேண்டும். இரண்டாம் கட்டத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, ஓரியண்டேஷன் புரோகிராம் நடத்தப்படும். அதைப்போல இன்பர்மேஷன் டெக்னாலஜி குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக கட்டணங்கள் வசூலிக்கப்படும்.
3. ஆர்ட்டிக்கிள்ஷிப் டிரெய்னிங்
சி.ஏ. இரண்டாம் கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், முன்னணி ஆடிட்டர்களிடம் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது பயிற்சி மேற்கொள்ள வேண்டியது கட்டாயம். இதை ஆர்ட்டிக்கிள்ஷிப் என்று சொல்வார்கள். இந்தக் காலக்கட்டங்களில் பல்வேறு நிறுவனங்களில் வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறைப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மாணவர்கள் நேரடியாக தெரிந்துகொள்வார்கள். பயிற்சிக்காலத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் வழங்கவேண்டும் என்று நியதி இருக்கிறது. ஆனால், நடைமுறையில் நகரங்களுக்குத்தக்கவாறும் ஆடிட்டர்களின் மனநிலையை பொறுத்தவாறும் பயிற்சிக்காலத்தில் ரூ.5000 முதல் பத்தாயிரம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளில் இரண்டரை ஆண்டுகள் பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்கள் சி.ஏ. படிப்பில் கடைசி கட்டமான ஃபைனல் எக்ஸாமிற்கு விண்ணப்பிக்கலாம்.
4. ஃபைனல் எக்ஸாம்
இந்தத் தேர்வில் மொத்தம் எட்டுத் தாள்கள். இதிலும் ஒவ்வொரு தாளிலும் கண்டிப்பாக 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றாகவேண்டும். அதில் குறையும் மாணவர்கள் தோல்வியடைந்தவர்களாக கருதப்படுவார்கள். தனித்தனியாக 40 சதவீத மதிப்பெண்களும் மொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசின் தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆஃப் இந்தியா சார்பில் ஜெனரல் மேனேஜ்மெண்ட் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் (ஜி.எம்.சி.எஸ்.) எனப்படும் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சியானது மொத்தம் 30 நாள்கள். இந்தப் பயிற்சியில் ஆடிட்டர்கள் தாங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும், வாடிக்கையாளர்களிடம் எப்படி கலந்துரையாடவேண்டும் என்ற விஷயங்கள் ஆரம்பித்து பல்வேறு விஷயங்கள் கற்றுத்தரப்படும்.
இந்தப் பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு ஏ.சி.ஏ. எனப்படும் அசோசியேட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஷிப் எனப்படும் சான்றிதழ் அளிக்கப்படும். இந்தச் சான்றிதழைப் பெற்றவர்கள் , ஆடிட்டர் பணியினை தொடரலாம்.
கல்விக் கடன் : இது ஒரு தொழிற்படிப்பு ஆக இருப்பதால் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பு படிப்பதற்கு எவ்வாறு கல்விக்கடன் வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறதோ அதேபோல், சி.ஏ. படிப்பிற்கும் பல்வேறு வங்கிகள் எந்தவித காப்பும் இல்லாமல் கடன் வழங்கி வருகின்றன.
வேலைவாய்ப்பு: சி.ஏ. படித்து வெளிவரும் மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் ஃபைனான்சியல் அனாலிசஸ், மேனேஜ்மெண்ட் கன்சல்டன்ஸி, டேக்ஸ் கன்சல்டன்ஸி, கார்ப்போரேட் லா அட்வைஸ், புராஜக்ட் பிளானிங் அண்ட் பைனான்ஸ், போரன்சிக் ஆடிட் அண்ட் இன்வஸ்டிகேஷன் போன்ற பிரிவுகளில் பணியாற்றலாம். இந்தப் பிரிவில் பணியில் சேருபவர்களுக்கு தொடக்கத்திலேயே மாதம் ரூ. 50 ஆயிரம் வரை சம்பளம் பெறலாம்.
கட்டணம்:
சிபிடி தேர்வுக்கு ரூ. 6,000 ஐபிசிசி தேர்வுக்கு ரூ. 10 ஆயிரம் என மொத்தம் நான்கரை ஆண்டுகளுக்கும் சேர்த்து அதிகபட்சமாக 42,000 ரூபாய் செலவாகும்.
இந்தியன் சார்டர்டு அக்கவுன்டன்ட் நிறுவனத்தின் சென்னை பிராந்திய அலுவலகத்தில் சிஏ படிப்புக்கான வகுப்புகள் நடைபெறுகின்றன. தென் பிராந்தியத்தில் 29 கிளை அலுவலகங்கள் உள்ளன. சி.ஏ. படிப்பு பற்றிய முழு விவரங்களையும் அறிய, தகவல் புத்தகத்தை ரூ.100 செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
Comments
Post a Comment