என்றைக்கு ஆசிரியர்கள் கையில் பிரம்பு கீழே விழுந்ததோ அன்றே மாணவர்களின் ஒழுக்கம் போச்சு.. பேரரசு
என்றைக்கு ஆசிரியர்கள் கையில் இருந்த பிரம்பு கீழே விழுந்ததோ அன்றைக்கே மாணவர்களின் ஒழுக்கம் போச்சு என இயக்குநர் பேரரசு ஆவேசமாக பேசியுள்ளார்.
ஜேஆர்ஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் என். ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள லைசென்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராதாரவி, என்.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ கருப்பையா, அபி நட்சத்திரா,வையாபுரி, நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. இந்த விழாவில் சிங்கர் ராஜலட்சுமி, இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் பேரரசு பேசுகையில் இன்று ஸ்கூல் படிக்கிற பசங்கள் எல்லாம் குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அது போல் பெண் பிள்ளைகளும் கையில் பீர் பாட்டிலுடன் போட்டோ எடுத்து போடுறாங்க. இதையெல்லாம் பார்க்கும் போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.
பெண் பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். இதெல்லாம் எப்படி நடக்குது. இதற்கெல்லாம் ஒரே காரணம்தான் இருக்கிறது. இன்று பசங்கள் எல்லாம் கெட்டு குட்டிச்சுவராகிவிட்டார்கள். அவர்களிடையே மனிதாபிமானம், சுயஒழுக்கம், யாரையும் மதிக்கிறது இல்லை, தேசபக்தி, தெய்வபக்தி, மொழிப்பற்றும் இல்லை.
இவை எல்லாவற்றுக்கு ஒரே ஒரு காரணம் என்னவென்றால் ஆசிரியர்களின் கையில் இருந்த பிரம்பு கீழே விழுந்ததுதான். அன்றைக்கே மாணவர்களின் ஒழுக்கமும் போச்சு. ஒவ்வொரு மாணவரும் தாய், தந்தைக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ வாத்தியாருக்கு பயந்தார்கள். ஊர்களில் பையன் நிறைய சேட்டை செய்வான். அவனை அப்பா, அம்மா கண்டித்தாலும் அடங்க மாட்டான். ஆனால் வாத்தியார்கிட்ட சொல்லிடுவேனு சொன்னா போதும். பயப்படுவான்.
அந்த பிரம்புதான் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தது. அந்த பிரம்புதான் மாணவர்களை படிக்க வைத்தது. அந்த பிரம்பை ஆசிரியர்கள் கையில் இருந்து பிடுங்கி போட்டது யார்? ஆசிரியர்களிடம் துப்பாக்கியை கொடுக்கிறீர்களோ இல்லையோ பிரம்பை மீண்டும் கொடுங்கள். பள்ளி பருவத்தில் வராத ஒழுக்கம் வேறு எப்போதுமே வராது. பள்ளி பருவத்தில் குடிக்கத் தொடங்கினால், சாகும் வரை குடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
திருந்தவே மாட்டார்கள். எப்படி பெண்களை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய துணிச்சல் வந்தது? ஒழுக்கம் போய்விட்டது. அவர்கள் செய்யும் தவறை அவர்களால் உணர முடியலை. ஆசிரியர்களின் கையில் புத்தகம் இருப்பது கல்வியை கற்றுக் கொடுக்கும். பிரம்பு இருப்பது ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும் என பேரரசு ஆக்ரோஷமாக பேசியிருந்தார்.
Comments
Post a Comment