'தமிழக அரசே..பகுதி நேரத்தை ஒழித்திடுக' பகுதி நேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்!




பணி நிரந்தரம் கோரி, அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.



தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 'பணி நிரந்தரம்' வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தியும், திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை பள்ளி கல்வித்துறை அலுவலக வளாகத்தில் இன்று (மே 22) தொடங்கியுள்ளனர்.


தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி, கம்ப்யூட்டர், தையல் இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகியப் பாடப்பிரிவுகளை கற்பிப்பதற்குப் பகுதி நேர ஆசிரியர்கள் 2011ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டனர். வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணி என்ற விதியின் அடிப்படையில் மாதம் ரூ.5000 தொகுப்பு ஊதியத்தில் முதலில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.


இதனைத்தொடர்ந்து, பல்வேறு காலகட்டங்களில் போராடி மத்திய அரசின் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மாதம் பத்தாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். 2011ஆம் ஆண்டு 15,169 பேர் நியமனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது, 12,000 பேர் பகுதி நேர ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், வயது முதிர்வு, வறுமை மற்றும் குடும்பச் சூழ்நிலை உள்ளிட்டவைகள் காரணமாக இறந்தவர்கள் உட்பட சுமார் 3,000 பேர் தற்போது பணியில் இல்லை.


பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் மே மாதம் பள்ளி விடுமுறை நாட்களில் இவர்களுக்கு ஊதியம் இல்லை என்பதால் மே மாதத்தில் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியின்போது, போராட்டம் நடத்திய இவர்களை நேரில் சந்தித்து 'திமுக ஆட்சி அமைந்த உடன் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என உறுதி' அளிக்கப்பட்டது. மேலும், 'திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் ஆட்சி அமைந்த உடன் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்' என வாக்குறுதி வழங்கப்பட்டது.


இந்நிலையில், பல குழுக்களாகப் பிரிந்து இருந்த பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து 'பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு' என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர். அந்த அமைப்பின் சார்பில் சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் இன்று (மே 22) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


 

இதுகுறித்து பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அமைப்பாளர்கள் ஜேசுராஜா, ஜெயப்ரியா ஆகியோர் கூறுகையில், 'பகுதி நேர ஆசிரியர்களாக கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணிபுரிந்து வரும் தங்களுக்கு மாதம் ரூ.10,000 தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. இதனால், எங்களுக்கு சமூகத்தில் மதிப்பும் குறைவாக உள்ளது. மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையில், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தெரிவித்தனர். அதன்படி, தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; ஆட்சி அமைந்த பின்னர், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதிநிலை சரியில்லை எனக்கூறி வந்தனர். தற்போதைய சூழ்நிலையில் பணி நிரந்தரம் வேண்டி, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வோம்' என்று தெரிவித்துள்ளார்.


மேலும், 'கடந்த காலங்களில் வாழ்வாதாரப் பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி, முதலமைச்சர் மற்றும் கல்வித்துறை அமைச்சரை சந்தித்துப் பேசினோம். இதனைத்தொடர்ந்து, உயர் அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் நிதித்துறை ஒப்புதல் இல்லை என்ற பதில் எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தங்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கும் வரை காலவரையற்றப்போராட்டம் தொடரும்' எனத் தெரிவித்துள்ளனர்.


தங்களை முறைப்படி தேர்வு வைத்து தேர்ந்தெடுத்ததால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TET) மூலம் மீண்டும் தேர்வு நடத்த தேவையில்லை எனவும், பெரும்பாலான ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதில் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Comments

Popular posts from this blog