ஆசிரியர் போட்டித் தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியில் அமர்த்த வேண்டும். ராமதாஸ் கோரிக்கை



ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை போட்டித் தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியில் அமர்த்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் குறிப்பில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு இரண்டு தேர்வுகள் நடத்தக்கூடாது; ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை போட்டித் தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி சென்னை பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மறுதேர்வு நடத்துவது மனிதாபிமானமற்ற செயல். தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 10 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதற்கு அவர்கள் எந்த வகையிலும் பொறுப்பல்ல. மாறாக கடந்த 9 ஆண்டுகளாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்காத தமிழக அரசே இதற்கு காரணம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அதற்கேற்ப ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்; போட்டித் தேர்வுகளை நடத்தக் கூடாது என்ற அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது; அதை தமிழக அரசு ஏற்க மறுப்பது அநியாயம்.


 


முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது; கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு மட்டுமே தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், அந்த பதவிகளை விட குறைந்த கல்வித் தகுதி மற்றும் சம்பளத்துடன் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு முதலில் தகுதித் தேர்வு நடத்தப்படுவதை ஏற்க முடியாது. இது மாபெரும் அநீதி!


இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே தகுதி. 2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரேங்க் அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. தற்போதும் இதே நிலை தொடர வேண்டும் என்பதே தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் கோரிக்கையாக உள்ளது. அதை ஏற்று அவர்களுக்கு பணி ஆணை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.

Comments

Popular posts from this blog