NEET UG 2023: இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் மீண்டும் வாய்ப்பு! கால அவகாசத்தை நீட்டிக்க காரணம் இதுதான்!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிரமங்கள் இருந்த நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.
இதில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் மட்டுமே, மருத்துவப் படிப்புக்குத் தகுதியானவர்கள் ஆவர். நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு, கலந்தாய்வில் உரிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும்.
2023 நீட் தேர்வு எப்போது?
2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 6ஆம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் நிறைவடைந்து, ஏப்ரல் 6ஆம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு முடிவடைந்தது. இந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தேசியத் தேர்வுகள் முகமை மீண்டும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது. இதன்படி, நீட் தேர்வை எழுத மாணவர்கள் ஏப்ரல் 11 முதல் 13ஆம் தேதி இரவு 11.30 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏப்ரல் 12ஆம் தேதிதான் விண்ணப்பிக்க முடிந்தது.
கடைசி நாளான இன்று மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் திணறினர். இந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: தொலைபேசி எண்: 011-40759000
இ- மெயில்: neet@nta.ac.in
Comments
Post a Comment