ஜூனில் ஓய்வு பெறும் டிஜிபி சைலேந்திரபாபு.. டிஎன்பிஎஸ்சி தலைவராகிறாரா? வெளியான பரபர தகவல்.. விவரம்



தமிழ்நாடு டிஜிபியாக இருக்கும் சைலேந்திரபாபு வரும் ஜூன் மாதத்துடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில், டி.என்.பி.எஸ்.சி தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.



தமிழக அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. குரூப்-1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு பணி நிலைகளில் காலியாகும் பணியிடங்களின் விவரங்களை பெற்று காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வுகளை நடத்தி வருகிறது.


ஆண்டு தோறும் கால அட்டவணைப்படி டி.என்.பி.எஸ்.சி இத்தகைய தேர்வுகளை நடத்தி வருகிறது. டி.என்.பி.எஸ்.சி நடத்தும் இந்த தேர்வுகளை தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் எழுதி வருகின்றனர்.


டி.என்.பி.எஸ்.சியில் தற்போது தலைவர் பணியிடம் காலியாக உள்ளது. ஒரு தலைவர் 13 உறுப்பினர்கள் பணிபுரியும் இந்த அமைப்பில் 4 பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். இதில், 4 பேரில் ஒருவர் தற்காலிக தலைவராக இருந்து வருகிறார். மீதம் உள்ள 3 உறுப்பினர்களில் கிருஷ்ண குமார் என்ற உறுப்பினர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனால், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 ஆக குறைய உள்ளது.


மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த டி.என்.பி.எஸ்.சிக்கு தலைவர் பதவியை உடனே நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். 


இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி அமைப்பில் காலியாக இருக்கும் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பதவி விரைவில் நிரப்பப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது தமிழக காவல்துறை டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபு விரைவில் நியமனம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.


வரும் ஜூன் மாதம் சைலேந்திர பாபு டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில், அதன்பிறகு டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. டிஎன்.பி.எஸ்.சி தலைவர் மற்றும் உறுப்பினர்களின் அதிகபட்ச வயது வரம்பு 62 ஆகும். தற்போது டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபுவின் வயது 59 ஆகும். எனவே மிக விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சைலேந்திரபாபு தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்புகள் அதிகம் உள்ளதாக டி.என்.எபி.எஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.


நேர்மையான அதிகாரியாக அறியப்படும் சைலேந்திர பாபு, தனது சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது போட்டித்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகள் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருவதுண்டு. எனவே, சைலேந்திரபாபு டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமனம் செய்யப்படலாம் என்று வெளியாகி இருக்கும் தகவல் தேர்வர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog