மாநிலம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒரே பாடத்திட்டம்... பாடத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் பேராசிரியர் ராமசாமி தகவல்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அமல்படுத்தத் தமிழ்நாடு உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது என்று பாடத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் பேராசிரியர் ராமசாமி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கல்லூரி பாடத்திட்டம் குறித்துப் பாடத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் பேராசிரியர் ராமசாமி அளித்த பேட்டியில், அனைத்து கலை மற்றும் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை உயர்கல்வி துறை அமல்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வரும் கல்வி ஆண்டான ஜூன் முதல் இந்த புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளார்.
இந்த புதிய பாடத்திட்டத்தின் படி, 75 சதவிகிதம் பாடப்பகுதிகள் பாடத்திட்ட வடிவமைப்பு குழுவின் பாடத்திட்டத்தினையும், 25 சதவிகிதம் கல்லூரிகள் தாங்களே சொந்தமாகப் பாடத்திட்டத்தையும் வடிவமைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தை மாற்றியமைக்கத் தமிழக அரசால் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற தலைவர் பேராசிரியர் ராமசாமி தலைமையில் மாநில பாடத்திட்ட வடிவமைப்பு குழு நியமிக்கப்பட்டது. கடந்த ஓராண்டாகப் பாடத்திட்ட வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பணிகள் நிறைவடைந்துள்ளது. இளங்கலையில் 69 பட்டப்படிப்புகளும், முதுகலையில் 86 பட்டப்படிப்புகள் என மொத்தம் 155 பட்டப்படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டம், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், ஒவ்வொரு பாடப்பிரிவுகளும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச பாடத்திட்டங்களையும் ஆய்வு செய்து புதிய பாடத்திட்ட முறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் வாயிலாகக் கடந்த காலங்களில் தன்னாட்சிக் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் வெவ்வேறு வகையான பாடத்திட்டங்கள் இருந்த நடைமுறை மாற்றப்பட்டு, அனைத்து கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பெரும்பான்மையாக ஒரே வகையான பாடத்திட்ட முறை கடைப்பிடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment