13,500 பேர்.. தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணி நியமனம் செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல்
திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை அதிமுக அரசு பணி நீக்கம் செய்தது.
இதனை எதிர்த்த வழக்கில் மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடரும்வரை மக்கள் நல பணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக தொடர்வார்கள் எனக்கூறி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
தமிழ்நாட்டில் திமுக அரசு சார்பில் மக்கள் நலப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் 13,500 பேரை கடந்த 2011ம் ஆண்டு அதிமுக அரசு பணி நீக்கம் செய்தது. இதனை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது. ஆனால் அப்போதைய அதிமுக அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இதனை எதிர்த்து டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே தான் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இதுபற்றி முதல்வர் ஸ்டாலின், ''மக்கள் நலப்பணியாளர்களை அதிமுக அரசு நீக்கம் செய்தது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.7,500 ரூபாய் வழங்கப்படும். மக்கள் நலப்பணியாளர்கள் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பாளர்களாக தொடர்வார்கள்'' என அறிவித்தார். இதையடுத்து மக்கள் நலப்பணியாளர்கள் மீண்டும் பணியில் இணைந்துள்ளனர்.
இதற்கிடையே உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வந்தது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தான் மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை எதிர்க்கும் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதன்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கூட மக்கள் நலப்பணியாளர்கள் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பாளர்களாக தொடர்வார்கள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. மக்கள் நலப்பணியாளர்கள் விஷயத்தில் தமிழ்நாட்டில் அதிமுக, திமுக இடையே அடிக்கடி மாறுபட்ட கருத்துகள் இருந்து வந்தன. இதனால் மக்கள் நலப்பணியாளர்களின் வேலை நியமனம், பணி நீக்கம் என மாறிமாறி வந்தது. இந்நிலையில் தான் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment